கார்ல ஏற சொன்னாங்க ஏறிட்டேன்..! ஒன்லி ஷூட்டிங் பர்பஸ்!போலி நம்பர் பிளேட் சர்ச்சைக்கு திருமா விளக்கம்! - Seithipunal
Seithipunal


அரசியலில் அடிக்கடி பரபரப்பை கிளப்பும் விசிக தலைவர் திருமாவளவன், இந்த முறை “TN 07 CM 2031” என்ற நம்பர் பிளேட்டை சுற்றிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். திருமாவளவன் ஒரு காரில் பயணிக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அந்த காரில் பொருத்தப்பட்டிருந்த நம்பர் பிளேட் உண்மையில் அந்த வாகனத்துக்கானதுதானா என்ற கேள்வி எழுந்தது. இதையடுத்து நெட்டிசன்கள் அந்த நம்பரை வைத்து பல்வேறு கேள்விகளையும் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.

திருமாவளவன் காரில் ஏறி வரும் காட்சிதான் முதலில் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றது. ஆனால், அரசியல் பேச்சுகள் மற்றும் அவரது வருகையைவிட, கேமராவின் பார்வை காரின் நம்பர் பிளேட்டின் மீதே திரும்பியது. “TN 07 CM 2031” என்ற எண்ணை வைத்து விசாரித்தபோது, அந்த பதிவு எண் வேறு வகை வாகனத்துடன் தொடர்புடையதாக தகவல்கள் வெளியாகியதாக கூறப்படுகிறது. இதனால் “கார் வேறு, நம்பர் வேறா?” என்ற கேள்வி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

அதிலும் “CM 2031” என்ற பதிவு எண்ணை வைத்து நெட்டிசன்கள் வழக்கமான அரசியல் கிண்டலையும் தொடங்கிவிட்டனர். 2031-ல் என்ன நடக்கப்போகிறது என்ற அரசியல் கணக்குகளை போட்டுக்கொண்டிருந்தவர்கள், தற்போது “முதலில் 2031 எந்த வண்டிக்கு சொந்தம் என்று கண்டுபிடிங்கப்பா!” என்று மீம்ஸ் போட்டு வருகின்றனர். விசிகவினர் ஒரு பக்கம் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ள நிலையில், மறுபக்கம் விமர்சகர்கள் நம்பர் பிளேட்டை வைத்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

“காரை யார் ஏற்பாடு செய்தது? நம்பர் பிளேட்டை யார் பொருத்தியது? அது உண்மையான பதிவு எண்ணா? வேறு வாகனத்தின் எண்ணா?” என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இந்த நிலையில், திருமாவளவன் செய்தியாளர்களிடம் அளித்த விளக்கமும் தற்போது சமூக வலைதளங்களில் விவாதமாகியுள்ளது.

இதுகுறித்து திருமாவளவன் கூறுகையில், இந்த கார் விவகாரம் தனக்கே தெரியாது என்றும், ஊடகங்களில் செய்தி வெளியான பிறகுதான் தனக்கும் விஷயம் தெரியவந்ததாகவும் தெரிவித்தார். “இந்தியன் மீடியா ஒர்க்ஸ்” என்ற அமைப்பு “ஒரு சமூக நீதியின் சகாப்தம்” என்ற பெயரில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்ததாகவும், அந்த நிகழ்ச்சியில் யார் யார் பங்கேற்கிறார்கள் என்பதுகூட தான் அங்கு சென்ற பிறகுதான் தெரிந்ததாகவும் அவர் கூறினார்.

மேலும், தான் அந்த நிகழ்ச்சிக்கு ஒரு பார்வையாளர் போலவே சென்றதாகவும், அரங்கின் வாசலில் வந்தபோது தன்னை காரில் ஏறுமாறு கூறியதால் அதில் ஏறி வந்ததாகவும் திருமாவளவன் விளக்கம் அளித்தார். அந்த கார் ஒரு காட்சியைப் பதிவு செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

காரை பற்றியும் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். அது ஜாக்குவார் கார் என்றும், டெஸ்லா கார் கிடையாது என்றும் கூறிய அவர், டெஸ்லாவைப் போன்ற லோகோ ஒன்று வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது என்றும் தெரிவித்தார். “அந்த வண்டியில் என்ன எண் உள்ளது என பார்த்துவிட்டா ஏறுவோம்? இரவு நேரத்தில் அது நமக்கு தெரியாது” என்ற வகையில் அவர் விளக்கம் அளித்தார்.

ஊடகங்களில் செய்தி வெளியான பிறகு தான் இதுகுறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் கேட்டதாகவும் திருமாவளவன் கூறினார். அதற்கு, இதுபோன்ற ஏற்பாடுகள் ஷூட்டிங் நிகழ்வுகளில் வழக்கமாக செய்யப்படுவதாகவும், ஏற்கனவே நடைபெற்ற நிகழ்வுகளை விசாரித்துவிட்டுதான் இதை ஏற்பாடு செய்ததாகவும் அவர்கள் தெரிவித்ததாக அவர் கூறினார். இதனை வழக்கம்போல் தன்னை குறிவைத்து விமர்சிக்கும் ஒரு தரப்பின் செயல்பாடாகவும் திருமாவளவன் விமர்சித்தார்.

ஆனால், திருமாவளவனின் இந்த விளக்கத்தை பார்த்த நெட்டிசன்கள் பலரும் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகின்றனர். “நிகழ்ச்சியில் யார் பங்கேற்கிறார்கள் என்பது தெரியாது, எந்த காரில் செல்கிறோம் என்பதும் தெரியாது, காரின் நம்பர் என்ன என்பதும் தெரியாது... அப்படியென்றால் எல்லாமே தெரியாமல் நடந்ததா?” என சிலர் கிண்டல் செய்து வருகின்றனர்.

“வண்டி யாருடையது என்பதை தெரியாமல் ஏறிவிட்டேன் என்ற விளக்கம் சர்ச்சையை முடிக்குமா?” என்றும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். அதே நேரத்தில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்தான் காரை ஏற்பாடு செய்ததாக திருமாவளவன் கூறியிருப்பதால், அந்த வாகனம் மற்றும் நம்பர் பிளேட் தொடர்பான முழு பின்னணி என்ன என்பது தெளிவாக தெரிய வேண்டியிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனால், தற்போது விசிக தலைவர் திருமாவளவன் தொடர்பான அரசியல் விவாதத்தைவிட “TN 07 CM 2031” என்ற நம்பர் பிளேட் விவகாரம்தான் சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. திருமாவளவனின் விளக்கம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்குமா அல்லது “வண்டி நம்பர் யாருடையது?” என்ற புதிய கேள்வியை இன்னும் பெரிதாக்குமா என்பதுதான் நெட்டிசன்களின் அடுத்த விவாதமாக மாறியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

They asked me to get into the car so I did It was strictly for shooting purposes Thiruma clarifies the fake number plate controversy


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




Seithipunal
--> -->