ஷார்ஜாவில் கர்நாடக நபர் கொடூரக் கொலை: 9 துண்டுகளாக உடல் மீட்பு; மனைவி, மகன் மாயம்!
Udupi Native Found Murdered and Dismembered in Sharjah; Wife and Son Missing
கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஆல்வின் என்பவர், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் ஒன்பது துண்டுகளாக வெட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து அவரது மனைவி மற்றும் 10-ஆம் வகுப்பு படிக்கும் மகன் ஆகியோரைக் காணவில்லை என உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
ஷார்ஜாவில் கடந்த 20 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்த ஆல்வின், கடந்த ஜூலை 20-ஆம் தேதி முதல் தனது உறவினர்களுடன் வழக்கமாகப் பேசுவதை நிறுத்தியுள்ளார். எனினும், அவரது செல்போனில் இருந்து, "உடல்நிலை சரியில்லாததால் ஓய்வில் இருக்கிறேன், பேச முடியாது" என குறுஞ்செய்திகள் (Text Messages) மட்டுமே வந்துள்ளன. வழக்கமாக குரல் செய்திகளை (Voice Messages) மட்டுமே அனுப்பும் ஆல்வின், திடீரென குறுஞ்செய்தி அனுப்பியதால் சந்தேகமடைந்த அவரது சகோதரர், ஷார்ஜாவில் உள்ள ஆல்வினின் நண்பர்களைத் தொடர்பு கொண்டபோது, ஆல்வின் இந்தியா சென்றுவிட்டதாகக் குடும்பத்தினர் கூறியதாகத் தெரிவித்துள்ளனர். ஆனால், பாஸ்போர்ட் தரவுகளை ஆய்வு செய்தபோது அவர் இந்தியாவிற்கு வரவில்லை என்பதும் ஷார்ஜாவிலேயே இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஷார்ஜா காவல் துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி சாலையில் கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்த ஆல்வினுக்குச் சொந்தமான காரில் இருந்து ஒன்பது துண்டுகளாக வெட்டப்பட்ட நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டது. டி.என்.ஏ (DNA) பரிசோதனை மூலம் அது ஆல்வினின் உடல் என்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது.
ஆல்வினின் மனைவி டினா துபாயில் ஆசிரியராகப் பணியாற்றி வந்த நிலையில், தற்போது அவரும் அவரது மகனும் மாயமாகியுள்ளனர். மேலும், ஆல்வின் தங்கியிருந்த குடியிருப்பின் சி.சி.டி.வி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தபோது, இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் உடைமைகளுடன் அங்கிருந்து அவசரமாகச் செல்வது பதிவாகியுள்ளது. இக்கொடூரக் கொலை சம்பவம் தொடர்பாகச் ஷார்ஜா காவல்துறையிடமிருந்து அதிகாரப்பூர்வ முதல் தகவல் அறிக்கை கிடைத்த பிறகே பின்னணி விவரங்கள் தெரியவரும் எனக் கூறும் உறவினர்கள், மாயமான மனைவி மற்றும் மகனைக் கண்டுபிடிக்கக் கோரி உடுப்பி காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர்.
English Summary
Udupi Native Found Murdered and Dismembered in Sharjah; Wife and Son Missing