அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களின் வங்கிக் கணக்குகளை விஜய் கண்காணிக்கிறார்.. அமைச்சர் ஆனந்த் பரபரப்பு பேச்சு! - Seithipunal
Seithipunal


மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து அமைச்சர் என். ஆனந்த் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அப்போது, அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் வங்கிக் கணக்குகளை முதலமைச்சர் விஜய் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், யாரேனும் தவறு செய்தால் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மதுராந்தகம் தொகுதியில் தங்கி இருந்து பிரசாரம் மேற்கொண்டு வரும் அமைச்சர் ஆனந்த், இன்று காலை மதுராந்தகம் தாலுகா முதுகரை ஊராட்சியில் கன்மாய் அருகே வேலை செய்து கொண்டிருந்த பெண்களை சந்தித்து தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு ஆதரவு திரட்டினார்.

அப்போது பேசிய அமைச்சர் ஆனந்த், கிராமப்புற மக்களுக்கான 100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தியுள்ளதாக தெரிவித்தார். மதுராந்தகம் தொகுதிக்கு மேலும் பல்வேறு திட்டங்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

மக்களின் பணத்தில் இருந்து ஒரு ரூபாய் கூட தாங்கள் தொடமாட்டோம் என்றும், ஊழல் செய்ய மாட்டோம், ஊழல் செய்யவும் விடமாட்டோம் என்றும் அமைச்சர் ஆனந்த் தெரிவித்தார். அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் வங்கிக் கணக்குகளை முதலமைச்சர் விஜய் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவர் கூறினார்.

யாரேனும் தவறு செய்தால் அவர்களின் பதவி அல்லது பின்னணி எதுவாக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அமைச்சர்களிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் அமைச்சர் ஆனந்த் தெரிவித்தார்.

மேலும், கடந்த 50, 60 ஆண்டுகளாக ஆட்சி செய்த கட்சிகள் மக்களுக்கு போதிய அளவில் எதுவும் செய்யவில்லை என்றும் அவர் விமர்சித்தார். மதுராந்தகம் தொகுதியில் பலருக்கு பட்டா தொடர்பான பிரச்சினைகள் இருப்பதாகவும், அவற்றுக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தவெக ஆட்சிக்கு வந்த நான்கு மாதங்களில் மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஆனந்த் கூறினார். தொடர்ந்து மக்கள் பணிகள் நடைபெற விசில் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் பிரசாரத்தில் கேட்டுக்கொண்டார்.

மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும் தவெக தரப்பில் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் தொகுதியில் முகாமிட்டு தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vijay is monitoring the bank accounts of ministers and MLAs Minister Anand sensational remarks


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




Seithipunal
--> -->