பொங்கலுக்கு இலவச வேட்டி - சேலை.. அப்டேட் கொடுத்த அமைச்சர் விஜய் பாலாஜி!
Pongal Dhoti-Saree Production to Be Completed by December 2026 Minister Vijay Balaji
சென்னை தலைமைச் செயலகத்தில் கைத்தறி, துணிநூல் மற்றும் கதர் துறை அமைச்சர் விஜய் பாலாஜி தலைமையில் சிறப்பு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச வேட்டி-சேலை வழங்கும் திட்டம் மற்றும் முதியோர் ஓய்வூதியத் திட்டப் பயனாளிகளுக்குத் தீபாவளிப் பண்டிகைக்கு வேட்டி-சேலை வழங்கும் திட்டங்களின் செயலாக்கம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் நூல் கொள்முதல் மற்றும் வேட்டி, சேலை உற்பத்தியின் தற்போதைய முன்னேற்ற நிலை குறித்து ஆய்வு செய்த அமைச்சர், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் உற்பத்தியை முழுமையாக முடிப்பதற்குத் தேவையான கூடுதல் தறிகளை இயக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும், தயாரிக்கப்படும் உடைகள் அனைத்தும் நிர்ணயிக்கப்பட்ட உயர்தரத்தில் இருப்பதை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
வரும் டிசம்பர் 2026-க்குள் அனைத்து வேட்டி, சேலை உற்பத்தி மற்றும் கொள்முதல் பணிகளையும் முழுமையாக நிறைவு செய்து, பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே பொதுமக்களுக்குத் தடையின்றி விநியோகிக்கும் வகையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்குகளுக்கு (TNSCSC Godowns) உடனுக்குடன் அனுப்பி வைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பித்தார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறைச் செயலாளர் லில்லி, துணிநூல் துறை ஆணையர் ஷோபனா, கைத்தறித் துறை இயக்குநர் உமாமகேஸ்வரி உள்ளிட்ட கைத்தறி மற்றும் துணிநூல் துறை மற்றும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனங்களின் உயர் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
English Summary
Pongal Dhoti-Saree Production to Be Completed by December 2026 Minister Vijay Balaji