“10 நாளில் ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் ஓட்டு கேட்கிறார்”.. தாராபுரத்தில் உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம் - Seithipunal
Seithipunal


தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளரை கடுமையாக விமர்சித்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். “10 நாளில் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் ஓட்டு கேட்டு வருபவருக்கு எவ்வளவு கொழுப்பு இருக்கும்? அவருக்கு அவ்வளவு இருந்தால், உங்களுக்கு எவ்வளவு இருக்கும் என்பதை நீங்கள் காட்டுவீர்களா?” என தாராபுரம் தொகுதி வாக்காளர்களிடம் அவர் கேள்வி எழுப்பினார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனி சட்டமன்ற தொகுதிக்கு அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் களத்தில் இருப்பதால் தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் திமுக வேட்பாளர் எஸ்.சுகன்யாவை ஆதரித்து கொளத்துப்பாளையம் பேரூராட்சி பகுதியில் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது முதலமைச்சர் விஜய் மற்றும் தவெக வேட்பாளர் சத்தியபாமாவை விமர்சித்துப் பேசிய உதயநிதி ஸ்டாலின், “முதலமைச்சர் விஜய் இன்னும் முதலமைச்சர் ஆனதையே நம்பவில்லை. ‘நான் முதலமைச்சர் ஆகக்கூடாதா?’ என்று கேட்கிறார். ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் மக்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். சட்டமன்றத்தில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு உரிய பதில் அளிப்பதுடன், பொதுமக்களின் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்ற வேண்டும்” என்றார்.

மேலும், மற்ற கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குவதாக தவெக அரசு மீது விமர்சனம் முன்வைத்த உதயநிதி, “அடுத்த கட்சி எம்.எல்.ஏ.க்களை மொத்தமாக கொள்முதல் செய்யும் ‘சோபா மாடல்’ முதலமைச்சருக்கு தாராபுரம் மக்கள் தக்க பதில் அளிக்க வேண்டும். ராஜினாமா செய்தவருக்கு மீண்டும் வாக்களித்தால் உங்களுக்காக குரல் கொடுப்பார்களா? கொடுக்கமாட்டார்கள். இப்போது வெற்றி பெற்றுவிட்டு மீண்டும் வேறு கட்சியில் சேர மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? இதைவிட நல்ல வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் சென்று விடுவார்கள்” எனக் கூறினார்.

சட்டமன்றத்தில் ஆளும் கட்சி உறுப்பினர்களின் செயல்பாடுகளையும் விமர்சித்த அவர், “ஒரு எம்.எல்.ஏ. வேலை இல்லை என்கிறார், இன்னொருவர் கார் இல்லை என்கிறார், மற்றொருவர் காதல் தோல்வி என்கிறார். சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சினைகளைப் பேச வேண்டும். ஆனால் ஆளும் கட்சி தரப்பில் முதலமைச்சர் பேசுவதே இல்லை” என தெரிவித்தார்.

விவசாயிகள் கடன் தள்ளுபடி தொடர்பாகவும் உதயநிதி ஸ்டாலின் பேசினார். “1989 சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று கலைஞர் முதலமைச்சராக பதவியேற்றபோது விவசாயிகளின் கடன்களை ஒரே கையெழுத்தில் தள்ளுபடி செய்தார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் கலைஞர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார். ஆனால் விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வோம் என்று கூறி தவெக அரசு ஏமாற்றியுள்ளது” என அவர் குற்றம்சாட்டினார்.

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு குறித்தும் விமர்சனம் முன்வைத்த உதயநிதி, முதலமைச்சர் விஜய்யின் தொகுதியிலேயே மின்வெட்டு ஏற்படுவதாகக் கூறினார். மேலும், தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ்.சுகன்யா படித்தவர் என்றும், சட்டமன்றத்தில் தொகுதி மக்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்பார் என்றும் கூறி, அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

He resigned after 10 days and is now back asking for votes Udhayanidhi Stalin scathing criticism in Dharapuram


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->