விழுப்புரத்தில் சினிமா துணை நடிகை மீது தாக்குதல்.. மகளை பார்க்கச் சென்றபோது தகராறு: கண்ணீருடன் காவல் நிலையத்தில் புகார்
Supporting film actress attacked in Villupuram altercation occurred while visiting her daughter files tearful complaint at the police station
விழுப்புரத்தில் குடும்பப் பிரச்சனை தொடர்பாக சினிமா துணை நடிகை மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக புகார் அளிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன்னை தாக்கிய மருமகன் குடும்பத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தனது மகளிடம் பேசுவதை யாரும் தடுக்கக்கூடாது என்றும் நடிகை கண்ணீருடன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த 45 வயதான பிரேமபிரியா, பல்வேறு தமிழ் திரைப்படங்களில் துணை நடிகையாகவும் நகைச்சுவை நடிகையாகவும் நடித்துள்ளார். விழுப்புரம் அவரது சொந்த ஊர் என்பதால், விழுப்புரம் அருகே அயினம்பாளையம் பகுதியில் இடம் வாங்கி வீடு கட்டி வசித்து வருகிறார். இவருக்கு பவானி என்ற 20 வயது மகள் உள்ளார்.
கடந்த ஜூன் 11ஆம் தேதி விழுப்புரம் குழந்தைவேல் நகர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜா, வனிதா தம்பதியின் மகன் பிரவீன் குமாருக்கும், பவானிக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. நிச்சயதார்த்தம் முடிந்த மூன்றாவது நாளில் பிரவீன் குமார் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியானது. இதனால் அதிர்ச்சியடைந்த பிரேமபிரியா, மகள் பவானியிடம் திருமணத்தை நிறுத்திவிடலாம் எனக் கூறியதாக தெரிகிறது.
இதனால் தாய், மகள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், பவானி கோபித்துக்கொண்டு பிரவீன் குமார் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி பிரவீன் குமாருக்கும் பவானிக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்துக்குப் பிறகு பவானி தனது தாய் பிரேமபிரியாவிடம் பேசுவதை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 10.30 மணியளவில் தனது மகள் பவானியை பார்ப்பதற்காக பிரேமபிரியா அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, தனது மகளை ஏமாற்றி திருமணம் செய்து வைத்துவிட்டதாகக் கூறி அவர் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆனந்தராஜா, அவரது மனைவி வனிதா மற்றும் மற்றொரு மகன் ஸ்ரீபன்ராஜ் ஆகியோர் பிரேமபிரியாவை தாக்கியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலில் காயமடைந்த பிரேமபிரியா விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இதையடுத்து தன்னை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தனது மகளிடம் பேசுவதை யாரும் தடுக்கக்கூடாது என்றும் வலியுறுத்தி விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் இரு தரப்பினரையும் அழைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்பப் பிரச்சனை தொடர்பாக சினிமா துணை நடிகை காவல் நிலையத்தில் கண்ணீருடன் புகார் அளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Supporting film actress attacked in Villupuram altercation occurred while visiting her daughter files tearful complaint at the police station