அரசு ஊழியர்கள் அதிருப்தி.. பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் போராட்டம்: தமிழக அரசுக்கு எச்சரிக்கை - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் தற்போதைய அரசும் முந்தைய அதிமுக, திமுக அரசுகளைப் போலவே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் புறக்கணிப்பதாக அரசு ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். குறிப்பாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், TAPS திட்டத்தில் உள்ள குளறுபடிகளை சரிசெய்ய வேண்டும், காலியாக உள்ள அரசுப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ள அவர்கள், தங்களது கோரிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர், முதலமைச்சரின் செயலாளர் அல்லது துறை அதிகாரிகளை சந்தித்து மனு அளிக்க முடியாத சூழல் நிலவுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல் எம்.எஸ்.பி. ஆடிட்டோரியத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பிரதிநிதித்துவப் பேரவை நடைபெற்றது. பேரவையின் தொடக்க நிகழ்ச்சியாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகிலிருந்து கொடி அணிவகுப்பு நடைபெற்றது. சங்கத்தின் மாநில தலைவர் மு.பாஸ்கரன் பேரவைக்கு தலைமை வகித்தார். மாநில தணிக்கையாளர் ச.முபாரக் அலி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார்.

இந்தப் பேரவையில் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கான விதிமுறைகளை உடனடியாக வெளியிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும், அரசுத் துறைகளில் காலியாக உள்ள லட்சக்கணக்கான பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 45-க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பிரதிநிதித்துவப் பேரவை பொதுச்செயலாளர் சோமசுந்தரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தற்போதைய அரசு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு எதிரான முடிவுகளை எடுப்பதாகவும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை மேற்கொள்வதாகவும் குற்றம்சாட்டினார்.

முந்தைய அதிமுக, திமுக அரசுகளைப் போலவே தற்போதைய அரசும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் புறக்கணிப்பதாக அவர் தெரிவித்தார். எம்.ஆர்.பி. செவிலியர்களை மாவட்ட முகமைகள் மூலமும் ஒப்பந்த முறையிலும் பணியமர்த்துவது, சென்னை மாநகராட்சி துப்புரவுப் பணிகளுக்கு வெளிமுகமை ஒப்பந்த முறையில் ஆட்களை நியமிப்பது உள்ளிட்ட தனியார்மய நடவடிக்கைகளுக்கும் அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.

மேலும், பல ஆண்டுகளாக தொகுப்பூதியம், மதிப்பூதியம் மற்றும் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வரும் சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், எம்.ஆர்.பி. செவிலியர்கள், வருவாய் கிராம ஊழியர்கள், ஊர்ப்புற நூலகர்கள், பி.பி.பி. மற்றும் சி.ஓ.இ. ஊழியர்களை காலமுறை ஊதியத்தில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். காலை சிற்றுண்டித் திட்டத்தில் தங்களை இணைக்க வேண்டும் என சத்துணவு பணியாளர்கள் முன்வைக்கும் கோரிக்கையிலும் அரசு தெளிவான முடிவை எடுக்க வேண்டும் எனக் கூறினார்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது, TAPS திட்டத்தில் உள்ள குளறுபடிகளை சரிசெய்வது, சாலைப் பணியாளர்களின் 41 மாத போராட்டக் காலத்தை உயர்நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் பணி வரன்முறை செய்வது, அரசுத் துறைகளில் காலமுறை ஊதியத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவது, கருணை அடிப்படையிலான பணி நியமனங்களை வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளும் பேரவையில் வலியுறுத்தப்பட்டன.

முதலமைச்சரையோ, முதலமைச்சரின் செயலாளரையோ அல்லது துறை அதிகாரிகளையோ சந்தித்து கோரிக்கை மனு அளிக்க முடியாத நிலை இருப்பதாகவும் சோமசுந்தரம் குற்றம்சாட்டினார். 'மாற்றம்' என்ற முழக்கத்துடன் ஆட்சிக்கு வந்தவர்கள் தற்போது ஏமாற்றத்தையே அளித்துள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.

அரசு ஊழியர் சங்கத்தை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும், இல்லையெனில் மாநிலச் செயற்குழுக் கூட்டத்தின் முடிவின்படி சென்னையில் அரசுக்கு எதிராக அடுத்தகட்டமாக தீவிரமான போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Government employees dissatisfied warning issued to the Tamil Nadu government of protests if demands including the Old Pension Scheme are not met


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->