தூய்மை பணியாளர்களுக்கு இனி உணவுக்கு பதில் தினசரி ரூ.50! 24,264 பேருக்கு ரூ.44.28 கோடி ஒதுக்கீடு! வெளியான அரசாணை!
Sanitation workers to receive 50 daily instead of meals Government order issued
சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உணவு வழங்கும் திட்டத்தை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கு மாற்றாக, பணிக்கு வரும் நாட்களில் ஒரு நாளுக்கு ரூ.50 வீதம் உணவுப்படி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மாநகராட்சியில் பணியாற்றும் 24,264 தூய்மை பணியாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.44.28 கோடி செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. சுமார் 24 ஆயிரம் பணியாளர்களுக்கு ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் காலை, மதியம் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டு வந்தது. ஆனால், உணவின் தரம், உரிய நேரத்தில் உணவு வழங்கப்படாதது, சமையலறைகளில் சுகாதார குறைபாடுகள், மூலப்பொருட்களின் தரம் மற்றும் பாத்திரங்களின் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக தொடர்ந்து புகார்கள் வந்ததாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து சென்னை மாநகராட்சியின் 1 முதல் 15 வரையிலான மண்டலங்களில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களிடம், தற்போதைய உணவு வழங்கும் திட்டத்தை தொடரலாமா என்பது குறித்து கருத்துக் கேட்பு நடத்தப்பட்டுள்ளது. இதில் சுமார் 92 சதவீத தூய்மை பணியாளர்கள், உணவுக்கு பதிலாக உணவுப்படியை பணமாக வழங்க வேண்டும் என்றும், அது தங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் தெரிவித்ததாக அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கி வந்த மூன்று ஆண்டு ஒப்பந்தத்தை ரத்து செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மாநகராட்சி மற்றும் தனியார் நிறுவனங்களின் கீழ் பணியாற்றும் மொத்தம் 24,264 தூய்மை பணியாளர்களுக்கும் இனி அவர்கள் பணிக்கு வரும் நாட்களை கணக்கிட்டு, ஒரு நாளுக்கு ரூ.50 வீதம் உணவுப்படி வழங்கப்படும். இந்தத் தொகை ஒவ்வொரு மாதமும் அவர்களது ஊதியத்துடன் சேர்த்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
24,264 பணியாளர்களுக்கு தினசரி ரூ.50 வீதம் உணவுப்படி வழங்குவதற்காக ஆண்டுக்கு ரூ.44 கோடியே 28 லட்சத்து 18 ஆயிரம் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கான நிர்வாக அனுமதியும் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், உணவு வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டு, அதற்கு பதிலாக பணியாளர்களின் விருப்பத்தின் அடிப்படையில் உணவுப்படி வழங்கும் புதிய நடைமுறை சென்னை மாநகராட்சியில் அமலுக்கு வருகிறது.
English Summary
Sanitation workers to receive 50 daily instead of meals Government order issued