திமுக, அதிமுக நிர்வாகிகளை குறிவைக்கும் அண்ணாமலை?கொங்கு மண்டலத்தில் அஸ்திவாரம்! அண்ணாமலை பலே பிளான்!
Is Annamalai targeting DMK and AIADMK functionaries Laying the groundwork in the Kongu region Annamalai clever plan
2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகும் தமிழக அரசியல் களம் பரபரப்பாகவே இருந்து வருகிறது. பாஜகவிலிருந்து விலகிய முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கியுள்ள நிலையில், அதை விரைவில் அரசியல் கட்சியாக மாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, கொங்கு மண்டலத்தில் கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்தும் நோக்கில் திமுக மற்றும் அதிமுகவில் புறக்கணிக்கப்பட்ட மூத்த நிர்வாகிகளை தனது பக்கம் ஈர்க்கும் முயற்சிகளை அவர் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியல் சமன்பாடுகள் கணிசமாக மாறியுள்ளன. தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்த நிலையில், திமுக எதிர்க்கட்சியாக மாறியுள்ளது. அதிமுக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. இந்த சூழலில், பாஜகவிலிருந்து வெளியேறிய அண்ணாமலை புதிய அரசியல் பாதையைத் தேர்ந்தெடுத்து, “இது நம்ம இயக்கம்” என்ற அமைப்பை தொடங்கியுள்ளார்.
அவரது ஆதரவாளர்கள் கூறுவதன்படி, இயக்கம் தொடங்கிய சில நாட்களிலேயே லட்சக்கணக்கானோர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பாஜக ஆதரவாளர்கள், வலதுசாரி சிந்தனையாளர்கள் மற்றும் இளைஞர்கள் என கூறப்படுகிறது. குறிப்பாக கொங்கு மண்டலத்தில் அண்ணாமலைக்கு ஆதரவானவர்கள் கணிசமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், சமூக ஊடக ஆதரவு மற்றும் உறுப்பினர் சேர்க்கை மட்டுமே அரசியல் வெற்றிக்கு போதுமானதாக இருக்காது என்பதால், களப்பணியில் அனுபவம் கொண்ட நிர்வாகிகளை இணைக்கும் முயற்சியில் அண்ணாமலை தரப்பு இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக கொங்கு மண்டலத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் ஓரங்கட்டப்பட்ட அல்லது புறக்கணிக்கப்பட்ட நிர்வாகிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர்களின் அரசியல் பயணம், வகித்த பொறுப்புகள், கிடைக்காமல் போன பதவிகள் உள்ளிட்ட விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், அவர்களுடன் நேரடி தொடர்புகள் ஏற்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. அண்ணாமலையுடன் இணைய விருப்பம் தெரிவித்தால், அவர்களுடன் நேரடியாக பேசி முக்கிய பொறுப்புகள் வழங்கப்படும் என்ற உறுதிமொழிகளும் வழங்கப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக வெற்றிக் கழகத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் இணைந்து வரும் நிலையில், மாற்று வாய்ப்புகளை எதிர்நோக்கும் சிலர் அண்ணாமலையின் புதிய அரசியல் முயற்சியை கவனித்து வருவதாகவும் கூறப்படுகிறது. அதேபோல், பாஜகவில் களப்பணியில் தீவிரமாக செயல்பட்டு வந்த இளைஞர்கள் மற்றும் நிர்வாகிகளையும் தனது இயக்கத்தில் இணைக்க அண்ணாமலை முயற்சித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், இந்த தகவல்கள் குறித்து அண்ணாமலை அல்லது அவரது இயக்கம் சார்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. புதிய இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் அதற்கான அமைப்பு விரிவாக்கப் பணிகளே தற்போது முன்னுரிமையாக இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
அண்ணாமலையின் இந்த நகர்வுகள் தமிழக அரசியலில் புதிய கூட்டணிகள் மற்றும் புதிய அரசியல் சமன்பாடுகளை உருவாக்குமா என்பது வரவிருக்கும் மாதங்களில் தெளிவாகும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
English Summary
Is Annamalai targeting DMK and AIADMK functionaries Laying the groundwork in the Kongu region Annamalai clever plan