அதிமுகவில் மீண்டும் ஐவர் அணி? ஈபிஎஸ் போடும் மாஸ்டர் பிளான்! அ.மலையால் பரபரக்கும் டெல்லி பாஜக! - Seithipunal
Seithipunal


தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக தலைவர்கள் குறித்து தொடர்ந்து அவதூறாக பேசி வந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்கள் சந்தித்தபோது அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என பகிரங்கமாக அறிவித்தார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதிமுகவின் தலைமையின் முடிவு இதுதான் என ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்தார். இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனக்கும் அதிமுகவுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை எனவும் ஒரு சில தலைவர்கள் தன் தன்மானத்தை சீண்டுவதால் அதற்கு எதிர்வினை ஆற்றாமல் இருக்க முடியாது எனவும் கூறியிருந்தார்.

ஆனால் அதிமுகவினரின் இந்த அறிவிப்புக்கு தமிழக பாஜகவை சேர்ந்த மற்ற தலைவர்கள் கருத்து கூறுவதை தவிர்த்தனர். குறிப்பாக பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் கூட்டணி விவகாரம் குறித்து டெல்லி தலைமை தான் முடிவு செய்யும் என திட்டவட்டமாக தெரிவித்தார். இதனால் அதிமுக பாஜக கூட்டணி நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக நீடிக்க வேண்டுமா என மாநில தலைவர் அண்ணாமலை அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுடன் திடீரென ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனையில் பகிரப்பட்ட கருத்தை டெல்லி தலைமைக்கு தெரிவித்ததாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் அதிமுகவைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகளான எஸ்.பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், சி.வி சண்முகம், தங்கமணி, கே.பி முனுசாமி ஆகியோர் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா ஆகியோரை நேரில் சந்திப்பதற்காக டெல்லி சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இதனை அதிமுக தரப்பு இன்னும் உறுதி செய்யவில்லை. 

மேலும் டெல்லி சென்றுள்ளதாக கூறப்படும் 5 முக்கிய நிர்வாகிகளும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை குறித்து பேசிய கருத்திற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை நீக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிபந்தனையை பூர்த்தி செய்தால் மட்டுமே தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இடம்பெறும் என திட்டவட்டமாக தெரிவிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் அதிமுக தலைவர்கள் டெல்லி சென்றதையோ, பாஜக தலைவர்களை சந்திக்க உள்ளதையோ அதிமுக தரப்பில் இருந்து உறுதி செய்யப்படாத நிலையில் பாஜக தரப்பிலும் அவ்வாறு எந்த தகவலும் வெளியாகவில்லை. உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் முடிந்த பிறகு சட்டீஸ்கர் உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களைச் சேர்ந்த கட்சியின் நிர்வாகிகளுடன் தேர்தல் ஆலோசனை மேற்கொண்டு வரும் நிலையில் நாளை அவர் மகாராஷ்டிரா செல்ல உள்ளார். இதற்கிடையே அவர் அதிமுக நிர்வாகிகளை சந்திக்க இருப்பதாக கூறப்படுவது எந்த அளவிற்கு சாத்தியம் என்று தெரியவில்லை.

இது ஒரு புறம் இருக்க மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது அவர் ஐவரை அணியை உருவாக்கி அவர்கள் மூலம் கட்சி செயல்பாடுகளையும் மற்ற விவகாரங்களையும் நிர்வகித்தார். அவர் உருவாக்கிய ஐவர் அணியில் தற்போதைய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் இடம்பெற்று இருந்தார். அந்த வகையில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளையும் முக்கிய முடிவுகளையும் எடுக்க ஐவர் அணியை தற்போதைய பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உருவாக்கியுள்ளாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுகவின் பொது செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி இருந்தாலும் கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகளுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் ஐவர் அணி குறித்தான தகவல் தற்போது வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Info AIADMK executives going to meet amitshah


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் லியோ திரைப்படம் எப்படி இருக்கு? உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் லியோ திரைப்படம் எப்படி இருக்கு? உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?
Seithipunal
-->