கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு-ன்னு எப்படி சொல்லுவீங்க...! - விஜயின் வெள்ளை அறிக்கைக்கு பதில் கொடுத்த மு க ஸ்டாலின்...!
How can you say that previous government left treasury empty MK Stalin responded Vijay white paper
தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய்க்கு, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்துகளை தெரிவித்ததுடன், அரசின் நிதிநிலை குறித்து அவர் முன்வைத்த கருத்துகளுக்கு பதிலடியும் வழங்கியுள்ளார்.இதுகுறித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். பதவியேற்ற உடனேயே தாங்கள் அறிவித்துள்ள மக்கள் நல நடவடிக்கைகளையும் வரவேற்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதே நேரத்தில், “ஆட்சிப் பொறுப்பேற்ற உடனே அரசின் கஜானாவில் பணமில்லை என்று பேச தொடங்க வேண்டாம். மக்களுக்காக செயல்பட வேண்டும் என்ற மனப்பாங்கும், ஆட்சியை முன்னேற்றும் நிர்வாகத் திறனும் இருந்தால் திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்த முடியும்” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், “கோவிட் பேரிடர், வெள்ளப் பாதிப்பு, ஒன்றிய பா.ஜ.க. அரசின் அழுத்தங்கள் என பல்வேறு சவால்களை எதிர்கொண்டபோதிலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏராளமான மக்கள் நலத்திட்டங்களை எங்கள் அரசு நிறைவேற்றியது” என தனது ஆட்சிக்கால சாதனைகளையும் அவர் நினைவுபடுத்தியுள்ளார்.
விஜய் தனது முதல் உரையிலேயே, “10 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையுடன் கஜானா காலியாக்கப்பட்டு விட்டது” என கூறியதற்கு பதிலளித்த ஸ்டாலின், “தமிழ்நாட்டின் கடன் அளவு அனுமதிக்கப்பட்ட நிதி வரம்புக்குள் தான் உள்ளது. மாநிலத்தின் நிதிநிலை குறித்து கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்டிலேயே விரிவாக விளக்கப்பட்டிருந்தது. அதன் பின்னரே தாங்கள் பல தேர்தல் வாக்குறுதிகளை அளித்தீர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, “மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மறந்து, தற்போது வேறு காரணங்களை கூறி திசைதிருப்ப முயற்சிக்க வேண்டாம். நடைமுறையில் செயல்படுத்தக்கூடிய வாக்குறுதிகளை மட்டுமே அளிப்பேன் என்று கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள், இப்போது தான் அரசு நிர்வாகத்தின் உள்ளமைப்பை முழுமையாக அறிந்து கொள்ளும் கட்டத்தில் இருக்கிறீர்கள்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும், “மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பதை காலப்போக்கில் நீங்களும் கற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறேன்.
உங்களுக்கு வாக்களித்த மக்களுடன் சேர்ந்து நானும் அதையே எதிர்பார்க்கிறேன்” என்று அரசியல் நையாண்டியுடன் அவர் கருத்து பதிவு செய்துள்ளார்.இறுதியாக, “தங்களின் தலைமையில் தமிழ்நாட்டின் வளர்ச்சி பயணம் தொடர்ந்து முன்னேற வேண்டும் என்பதே என் விருப்பம். மீண்டும் என் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
English Summary
How can you say that previous government left treasury empty MK Stalin responded Vijay white paper