எடப்பாடி VS சிவி சண்முகம்! அதிமுக பிளவில் பாஜக யாருக்கு ஆதரவு?யாருமே எதிர்பாராத ட்விஸ்ட்! டெல்லி பாஜக போடும் அரசியல் கணக்கு என்ன?
Edappadi VS CV Shanmugam Who will BJP support in the AIADMK split An unexpected twist What is the political calculation of Delhi BJP
தமிழக அரசியலில் அதிமுக உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், “பாஜக யாரின் பக்கம் நிற்கிறது?” என்ற கேள்வி தற்போது அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதமாக மாறியுள்ளது. குறிப்பாக, அதிமுகவில் ஏற்பட்டுள்ள இரட்டை அணித் தகராறில் பாஜக மேலிடம் தலையிட்டு சமரசம் செய்யுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இந்த சூழலில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அளித்த பதில் அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தற்போது அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணியும், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி – சி.வி.சண்முகம் தலைமையிலான அணியும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றன. மொத்தம் உள்ள 47 அதிமுக எம்.எல்.ஏக்களில் 22 பேர் எடப்பாடி பழனிச்சாமி அணியிலும், 25 பேர் வேலுமணி – சண்முகம் அணியிலும் இருப்பதாக கூறப்படுகிறது.
இதில் வேலுமணி – சண்முகம் தரப்பு, முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவு நிலைப்பாடு எடுத்திருப்பதோடு, “பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை” என்றும் வெளிப்படையாக அறிவித்துள்ளது. ஆனால் இதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமி இதுவரை நேரடியாக எந்த பதிலும் அளிக்கவில்லை.
இந்த நிலையில் கோவை பீளமேட்டில் உள்ள பாஜக மாவட்ட தலைமை அலுவலகத்தில் கட்சியின் மையக் குழுக் கூட்டம் நடைபெற்றது. பாஜக அமைப்பு தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நயினார் நாகேந்திரன், எல்.முருகன், தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன், எச்.ராஜா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம், “சட்டசபை தேர்தலில் அதிமுக ஒத்துழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறதே?” என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர்,“அதிமுக தேர்தலில் ஒத்துழைக்கவில்லை என்ற எந்த தகவலும் இல்லை. அதுபற்றி மையக் குழுக் கூட்டத்திலும் விவாதிக்கப்படவில்லை. தேர்தல் தொடர்பாக எதுவும் இதுவரை பேசப்படவில்லை” என்றார்.
அதேபோல், “பாஜக – அதிமுக கூட்டணி இல்லை என்று சி.வி.சண்முகம் கூறியுள்ளாரே?” என்ற கேள்விக்கும் அவர் நேரடியாக பதிலளிக்காமல்,“தேர்தலுக்குப் பிறகு அதிமுகவுடனான உறவு அமைதியாக இருக்கிறது. அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார். ஆனால் தேர்தலுக்குப் பிறகு அவர்களுக்குள் உள்கட்சி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதைப் பற்றி எதுவும் கூற முடியாது” என்று தெரிவித்தார்.
இதையடுத்து, “அதிமுக உள்கட்சி பிரச்சினையை தீர்க்க பாஜக முயற்சி எடுக்குமா?” என்ற கேள்வி எழுப்பப்பட்டபோதும், நயினார் நாகேந்திரன் எந்த பதிலும் அளிக்காமல் அங்கிருந்து நகர்ந்தார்.
சி.வி.சண்முகம் வெளிப்படையாக “பாஜகவுடன் கூட்டணி இல்லை” என்று அறிவித்த பிறகும், பாஜக தரப்பில் கடுமையான எதிர்வினை வராதது அரசியல் வட்டாரங்களில் கவனிக்கப்படுகிறது. குறிப்பாக, பாஜக மேலிடம் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு வெளிப்படையான ஆதரவு அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நயினார் நாகேந்திரனின் மென்மையான பதில் பல்வேறு அரசியல் யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது.
இதனால், “பாஜக தற்போது அதிமுக விவகாரத்தில் காத்திருந்து கவனிக்கும் நிலைப்பாட்டை எடுத்துள்ளதா?” என்ற கேள்வியும் அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.
English Summary
Edappadi VS CV Shanmugam Who will BJP support in the AIADMK split An unexpected twist What is the political calculation of Delhi BJP