கோயிலில் ஏற்பட்ட அவமானம்! இஸ்லாம் மதத்திற்கு மாறியது குறித்து உண்மைகளை உடைத்த நடிகர் ஜெய்.!
The humiliation at the temple Actor Jai broke the truth about his conversion to Islam
தமிழ் சினிமா நடிகர் ஜெய், தாம் இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டதற்கான காரணங்களை மனம் திறந்து பகிர்ந்துள்ள பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக கோயிலில் ஏற்பட்ட அனுபவங்களும், மசூதியில் கிடைத்த சமத்துவ உணர்வும் தான் தன்னை இஸ்லாத்தின் பக்கம் ஈர்த்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு பேட்டியில் பேசிய ஜெய், “நான் முன்பு பல மத வழிபாடுகளையும் பின்பற்றியிருக்கிறேன். மாலை அணிந்து சபரிமலைக்கும் சென்றிருக்கிறேன். இயேசுவுக்காக ஜெபமாலை அணிந்து ஒரு வருடம் விரதமும் இருந்திருக்கிறேன். ஆனால் கோயில்களில் தொடர்ந்து சில அவமானகரமான அனுபவங்களை சந்திக்க நேரிட்டது. அது என்னை மனதளவில் மிகவும் பாதித்தது” என்று கூறினார்.
அதன்பிறகு ஒருநாள் மசூதிக்கு சென்ற அனுபவம் தனது வாழ்க்கை பார்வையையே மாற்றியதாகவும் அவர் தெரிவித்தார்.
“மசூதிக்குள் சென்றபோது அனைவரும் அமைதியாக வரிசையாக நமாஸ் செய்துகொண்டிருந்தார்கள். நான் நடிகர் என்று அங்கிருந்தவர்களுக்கு தெரிந்திருந்தும், யாரும் தனிப்பட்ட கவனம் காட்டவில்லை. தொழுகை முடிந்து வெளியே வந்தபின் மட்டும் சிலர் அன்பாக பேசினார்கள். ஆனால் யாரும் புகைப்படம் கேட்கவோ, வேறுபாடு காட்டவோ இல்லை. அப்போது தான் அங்கு அனைவரும் சமம் என்ற உணர்வு எனக்குள் வந்தது” என்றார்.
மேலும், “மசூதிக்குள் சென்றவுடன் அங்கே அல்லாஹ்தான் உயர்ந்தவர். ஒருவர் எவ்வளவு பெரிய பிரபலமாக இருந்தாலும், அனைவரையும் ஒரே மாதிரி நடத்துவார்கள். தொழுகையின்போது தள்ளுமுள்ளு இருக்காது. யாரையும் வெளியே செல்ல சொல்ல மாட்டார்கள். எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அமைதியாக அமர்ந்து தொழலாம்” என்று கூறியுள்ளார்.
2019-ம் ஆண்டிலிருந்து இஸ்லாம் மதத்தை பின்பற்றி வருவதாக தெரிவித்த ஜெய், “இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பிறகு என் குணத்திலும் வாழ்க்கை அணுகுமுறையிலும் பெரிய மாற்றம் வந்துள்ளது. எந்த சாமியையும் கும்பிடாத பையன் இப்போது பக்தியுடன் இருக்கிறான் என்று வீட்டிலுள்ளவர்களும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்” என்றார்.
மேலும், இன்னும் அதிகாரப்பூர்வமாக பெயரை மாற்றவில்லை என்றாலும், “அஜீஸ் ஜெய்” என்ற பெயரை வைத்துக்கொள்ளும் யோசனையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நடிகர் ஜெய்யின் இந்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகளை கிளப்பியுள்ளது. சிலர் அவரது தனிப்பட்ட ஆன்மீக முடிவை வரவேற்று ஆதரவு தெரிவித்து வர, மற்றொருபுறம் இந்த பேட்டி குறித்து விவாதங்களும் எழுந்துள்ளன.
English Summary
The humiliation at the temple Actor Jai broke the truth about his conversion to Islam