ஸ்டாலினை வீழ்த்திய வி.எஸ்.பாபுவுக்கு அமைச்சர் பதவி ஏன் இல்லை? வி.எஸ்.பாபுவை விஜய் மறந்தது ஏன்? பின்னணி!
Why doesnot VS Babu who defeated Stalin have a ministerial post Why did Vijay forget VS Babu Background
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மிகப்பெரிய அரசியல் அதிர்வை ஏற்படுத்திய வெற்றிகளில் ஒன்றாக பார்க்கப்பட்டது கொளத்தூர் தொகுதி முடிவு. திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது சொந்த தொகுதியிலேயே தோற்கடித்த தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு, தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மாநில அரசியலில் முக்கிய முகமாக பேசப்பட்டார்.
ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சரவை விரிவாக்கத்தில் அவருக்கு இடம் வழங்கப்படாதது தற்போது அரசியல் வட்டாரங்களிலும், தவெக நிர்வாகிகளிடையிலும் பெரிய விவாதமாக மாறியுள்ளது.
முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு இன்று அமைச்சரவை விரிவாக்கம் செய்தது. ஏற்கனவே பதவியேற்றிருந்த 9 அமைச்சர்களுடன் சேர்த்து, மேலும் 23 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். இதில் காங்கிரஸ், கூட்டணி கட்சிகள் மற்றும் தவெக முக்கிய நிர்வாகிகளுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
நடிகர் ஸ்ரீநாத், மரிய வில்சன் உள்ளிட்ட பலர் எதிர்பார்த்தபடி அமைச்சரவையில் இடம்பெற்ற நிலையில், ஸ்டாலினை வீழ்த்திய வி.எஸ்.பாபுவுக்கு வாய்ப்பு கிடைக்காதது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலினை 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தார் வி.எஸ்.பாபு. திமுக ஆட்சியை இழந்ததை விட, ஸ்டாலினின் தோல்வியே கட்சித் தொண்டர்களுக்கு அதிக அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக அப்போது பேசப்பட்டது.
“யார்ரா இந்த பாபு?” என்று தேசிய அளவில்கூட பேசப்படும் அளவுக்கு அவர் அரசியல் கவனம் பெற்றிருந்தார். அதனால் அவருக்கு அமைச்சரவை இடம் உறுதி என பலரும் எதிர்பார்த்தனர்.ஆனால், தவெக தலைமையின் முடிவு வேறு மாதிரியாக அமைந்துள்ளது.
இதற்குப் பின்னால் பல அரசியல் மற்றும் அமைப்பு ரீதியான காரணங்கள் இருக்கலாம் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.ஏற்கனவே சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த முதல்வர் விஜய் உட்பட 7 பேர் அமைச்சர்களாக உள்ளனர். மேலும் ஒருவருக்கு அதே பகுதியிலிருந்து வாய்ப்பு வழங்கினால், மற்ற மாவட்ட நிர்வாகிகளிடையே அதிருப்தி அதிகரிக்கலாம் என்ற கணக்கில் தவெக தலைமை செயல்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
குறிப்பாக தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட 19 மாவட்டங்களுக்கு அமைச்சர் பிரதிநிதித்துவமே இல்லை என்ற விமர்சனங்கள் தற்போது எழுந்துள்ளன.
மற்றொரு காரணமாக, வி.எஸ்.பாபுவை அமைச்சரவைக்குள் கொண்டு வருவதற்குப் பதிலாக, கட்சியின் மாநில அளவிலான முக்கிய பொறுப்பு அல்லது அரசு வாரியத் தலைவர் பதவி வழங்கி, வரும் நாடாளுமன்றத் தேர்தல் பணிகளில் பயன்படுத்த விஜய் திட்டமிட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், வி.எஸ்.பாபுவுக்கு கிடைக்க வேண்டிய அமைச்சர் வாய்ப்பை மரிய வில்சன் பெற்றுவிட்டதாக அவரது ஆதரவாளர்கள் சிலர் சமூக வலைதளங்களில் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
“சீனியாரிட்டி மற்றும் தேர்தல் சாதனையை விட, சமூக மற்றும் அரசியல் சமன்பாடுகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது” என்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகின்றன.
மேலும், ஸ்டாலினை தோற்கடித்ததற்காக மட்டும் அமைச்சர் பதவி வழங்கினால் அது அரசியல் பழிவாங்கல் போல தோன்றும் என்ற எண்ணமும் விஜய்க்கு இருந்திருக்கலாம் என தவெக வட்டாரங்களில் பேசப்படுகிறது.
வி.எஸ்.பாபு அரசியலில் புதிதாக வந்தவர் அல்ல என்றும், பல ஆண்டுகளாக கொளத்தூர் பகுதியில் களப்பணியில் ஈடுபட்டு வந்தவர் என்றும் அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
“2011-ல் திமுகவில் இருந்தபோதும், பின்னர் அதிமுகவில் இருந்தபோதும், கொளத்தூர் மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றியவர். விஜய் முகத்தை பார்த்து மட்டும் அவருக்கு வாக்குகள் கிடைக்கவில்லை” என்ற கருத்துகளும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் வலுத்து வருகிறது.
அதேநேரத்தில், தவெக நிர்வாகிகளின் மற்றொரு தரப்பு, “தளபதி எடுக்கும் முடிவுகளுக்கு பின்னால் அரசியல் காரணம் இருக்கும். வி.எஸ்.பாபுவுக்கு உரிய அங்கீகாரம் விரைவில் வழங்கப்படும்” என்று கூறி ஆதரவாளர்களை சமாதானப்படுத்தி வருகின்றனர்.
அமைச்சரவை அமைப்புகளில் அதிருப்தி மற்றும் உள்கட்சி சலசலப்பு உருவாகுவது எந்தக் கட்சியிலும் இயல்பான விஷயம்தான். ஆனால், தவெக போன்ற வேகமாக வளர்ந்து வரும் கட்சியில் இந்த அதிருப்திகளை தலைமை எவ்வாறு சமாளிக்கிறது என்பதே அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது.
English Summary
Why doesnot VS Babu who defeated Stalin have a ministerial post Why did Vijay forget VS Babu Background