கலைஞர் குடும்பத்தில் புதிய புயல்! தவெகவில் இணையப் போகிறாரா அழகிரி மகள் கயல்விழி? மேயர் நாற்காலிக்கு ஸ்கெட்ச்!
New storm in the artist family Is Alagiri daughter Kayalvizhi going to join Tvk Sketch for the mayor chair
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு மாநில அரசியல் களம் தொடர்ந்து புதிய திருப்பங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை பிடித்ததிலிருந்து பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து முக்கிய நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் தவெக பக்கம் சாய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் தற்போது திமுகவின் கலைஞர் குடும்பத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி, தவெகவில் இணையப் போவதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான தகவல்கள் பரவி வருகின்றன.
சமீபத்தில் சென்னை நடைபெற்ற முதலமைச்சர் விஜய்யின் பதவியேற்பு விழாவில் திமுகவின் பல முக்கிய தலைவர்கள் பங்கேற்காத நிலையில், கயல்விழி நேரில் கலந்துகொண்டது அரசியல் கவனத்தை ஈர்த்தது. அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விஜய் சரித்திர சாதனையாளர். அவரது கடின உழைப்புக்குக் கிடைத்த வெற்றிதான் இது” என்று தெரிவித்திருந்தார். இந்த கருத்தே அரசியல் வட்டாரங்களில் பல்வேறு யூகங்களுக்கு காரணமாக அமைந்துள்ளது.
மதுரையில் நீண்ட காலமாக அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தாலும், மு.க.அழகிரிக்கு இன்னும் தென்மாவட்டங்களில் ஆதரவாளர்கள் கணிசமாக உள்ளனர். குறிப்பாக ஸ்டாலின் தலைமையிலான திமுக நிர்வாகத்தின் மீது அதிருப்தியில் உள்ள அழகிரி ஆதரவாளர்கள், கயல்விழி புதிய அரசியல் பாதையை தேர்வு செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.
விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள சூழலில், கயல்விழியின் இந்த அரசியல் நகர்வுக்கு பின்னால் பெரிய அரசியல் கணக்கு இருப்பதாகவும் பேசப்படுகிறது. குறிப்பாக மதுரை மாநகராட்சி மேயர் பதவியை குறிவைத்து கயல்விழி செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மதுரையில் அழகிரி குடும்பத்தின் பாரம்பரிய செல்வாக்கும், தவெகவுக்கு கிடைத்துள்ள இளைஞர்கள் மற்றும் மகளிர் ஆதரவும் இணைந்தால், அது மிகப்பெரிய அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும் என அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.
மேலும், கலைஞர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரே தற்போது திமுகவின் பிரதான அரசியல் எதிரியாக உருவெடுத்துள்ள தவெகவில் இணைந்தால், அது திமுகவுக்கு அரசியல் ரீதியாக பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். கயல்விழியின் இந்த நகர்வுக்கு பின்னணியில் மு.க.அழகிரியின் அமைதியான ஆதரவும் இருக்கலாம் என்ற பேச்சுகளும் அரசியல் வட்டாரங்களில் உலா வருகிறது.
அண்மையில் அழகிரி ஆதரவாளர்களாக கருதப்படும் சில முக்கிய நிர்வாகிகள் அதிமுகவுடன் நெருக்கம் காட்டியிருந்தனர். அதேபோல் முன்னாள் அமைச்சர் மூர்த்தியை தோற்கடித்த கார்த்திகேயனும் அழகிரி ஆதரவாளராக பார்க்கப்படுகிறார். அவரின் மூலமாகவே கயல்விழி – தவெக தொடர்பு வலுப்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால், கயல்விழி உண்மையிலேயே தவெகவில் இணைவாரா? அவர் மதுரை அரசியலில் நேரடியாக களமிறங்குவாரா? என்பதுதான் தற்போது தமிழக அரசியலில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.
English Summary
New storm in the artist family Is Alagiri daughter Kayalvizhi going to join Tvk Sketch for the mayor chair