அத்துமீறி சோதனை... அமலாக்கத்துறை மீது வழக்கு பதிந்த தமிழக காவல்துறை!
ED Raid TN Police case filed DMK Minister BJP
தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, திண்டுக்கல் ஆத்தூர் தொகுதியை சேர்ந்தவர். திமுக மாநில துணை பொதுச்செயலாளராகவும் இருக்கும் அவர், முன்பாக கூட்டுறவு துறை மற்றும் வருவாய் துறை அமைச்சராக பணியாற்றிய அனுபவமுள்ள மூத்த தலைவர்களில் ஒருவராக திகழ்கிறார்.
இந்நிலையில், இன்று காலை அவரது வீடுகள் மற்றும் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை அடையாறு பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது வீடும், சேப்பாக்கம் எம்எல்ஏ விடுதியில் உள்ள அவரது அறையும் குறிவைக்கப்பட்டன. காலை 6 மணியளவில் சுமார் 10 அதிகாரிகள் சென்று அங்கு சோதனை மேற்கொண்டனர்.
அதேபோன்று திண்டுக்கல் மாவட்டத்திலும் பெரியசாமியுடன் தொடர்புடைய பல இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதிகளில் பரபரப்பு நிலவியது.
இந்நிலையில், சென்னையில் சோதனை மேற்கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். எம்எல்ஏ விடுதிக்குள் அனுமதியின்றி நுழைந்ததாக சட்டமன்ற செயலாளர் சீனிவாசன் புகார் அளித்ததை அடுத்து, திருவல்லிக்கேணி போலீசார் இந்த வழக்கை பதிவு செய்துள்ளனர்.
அமைச்சர் பெரியசாமி மீது அமலாக்கத்துறை சோதனை, அதற்கு எதிராக போலீசார் நடவடிக்கை என, தமிழக அரசியல் சூழல் திடீர் பரபரப்பை எட்டியுள்ளது.
English Summary
ED Raid TN Police case filed DMK Minister BJP