இடைத்தேர்தலுக்கு முன்பே அதிருப்தி? தவெகவில் இணைந்த முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அப்செட்!முக்கிய பதவி கோரி வலியுறுத்தல்! - Seithipunal
Seithipunal


தமிழக அரசியலில் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் அரசியல் எதிர்காலம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. இடைத்தேர்தல் எப்போது நடைபெறும் என்பது இன்னும் தெளிவாகாத நிலையில், தவெகவில் இணைந்த சில முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் இரு விஜயபாஸ்கர்கள் உள்ளிட்ட 7 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். இதனுடன், முதல்வர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதியும் சேர்த்து மொத்தம் 8 தொகுதிகள் காலியாக உள்ளன.

இந்த நிலையில், சில தொகுதிகள் தொடர்பான தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருப்பதால், திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை மற்றும் கரூர் உள்ளிட்ட தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இதனால் இடைத்தேர்தல் எப்போது நடைபெறும் என்பது இன்னும் உறுதியாகவில்லை.

இதற்கிடையில், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக தரப்பில் சபாநாயகரிடமும் நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளதால், அரசியல் நிலைமை மேலும் சிக்கலாகியுள்ளது.

இந்த சூழலில், காலியாக உள்ள 8 தொகுதிகளிலும் நடத்தப்பட்டதாக கூறப்படும் ஒரு உள்கட்சிச் சர்வேயில், திருச்சி கிழக்கு தொகுதியைத் தவிர மற்ற தொகுதிகளில் சாதகமான நிலை இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் அடிப்படையில், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டாலும், ராஜினாமா செய்த முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.க்களில் இரண்டு விஜயபாஸ்கர்களைத் தவிர மற்ற ஐந்து பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாது என்று தவெக உயர்மட்டம் வாய்மொழியாகத் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த தகவலால் அதிருப்தியடைந்த அந்த ஐந்து பேரும், கடந்த சில வாரங்களாக தலைமைச் செயலகத்திற்கு வருவதைக் குறைத்துள்ளதாகவும், தங்களுக்கு தேர்தல் சீட் கிடைக்காவிட்டால் முக்கிய பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர் (Chairman) போன்ற பொறுப்புகளை வழங்க வேண்டும் என்று அமைச்சர்கள் புஸ்சி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனாவிடம் வலியுறுத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்கு, "இந்த விவகாரம் குறித்து முதல்வரிடம் எடுத்துரைத்துள்ளோம். பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பிறகு நல்ல முடிவு வரும். அதுவரை பொறுமையாக இருங்கள்" என்று அமைச்சர்கள் சமாதானப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், அந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்களில் சிலர் அதிமுகவில் உள்ள தங்களது பழைய நண்பர்களிடம், "அவசரப்பட்டு தவறான முடிவை எடுத்துவிட்டோம். அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வந்தோம். இப்போது தொகுதியில் போட்டியிட வாய்ப்பே இல்லை என்று கூறிவிட்டனர். சீட் கொடுத்தாலும் வெற்றி பெறுவது கடினம். கட்சியிலும் எதிர்பார்த்த முக்கியத்துவம் இல்லை. எங்களின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது" என்று மனவேதனையுடன் பகிர்ந்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

எனினும், இத்தகவல்கள் குறித்து தவெக தரப்பிலோ, சம்பந்தப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தரப்பிலோ இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியாகவில்லை. அரசியல் வட்டாரங்களில் பரவி வரும் தகவல்களின் அடிப்படையிலேயே இந்த விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dissatisfaction before the byelection Former AIADMK MLAs who joined TVK are upset they are pressing for key posts


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...




Seithipunal
--> -->