மோகன் ராஜாவுடன் முதன்முறையாக இணையும் கார்த்தி! 31வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
Karthi teams up with Mohan Raja for the first time Official announcement of his 31st film
சென்னை: நடிகர் கார்த்தி அடுத்தடுத்து பல படங்களில் பிஸியாக நடித்து வரும் நிலையில், அவரது 31வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் மோகன் ராஜா இயக்க உள்ளார்.
2022-ஆம் ஆண்டு வெளியான 'சர்தார்' திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் தற்போது இறுதிக்கட்ட பணிகளில் உள்ளது. பி.எஸ். மித்ரன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கார்த்தி, மாளவிகா மோகனன், எஸ்.ஜே. சூர்யா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'சர்தார் 2' திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி வெளியாக உள்ளது.
இதனைத் தொடர்ந்து, 'டாணாக்காரன்' பட இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி வரும் 'மார்ஷல்' படத்திலும் கார்த்தி நடித்து வருகிறார். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் கடல் பின்னணியில் உருவாகும் கேங்ஸ்டர் கதையாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் கார்த்திக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க, ஆதி பினிஷெட்டி வில்லனாக நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், பிரபு, லால் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
அதேபோல், இயக்குநர் கல்யாண் சங்கர் இயக்கும் பெயரிடப்படாத புதிய படத்திலும் கார்த்தி நடித்து வருகிறார். இந்தப் படத்தில் மீனாட்சி சவுத்ரி கதாநாயகியாக நடிக்கிறார். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், கார்த்தியின் 31வது படம் குறித்து தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை, வெற்றிப்பட இயக்குநர் மோகன் ராஜா இயக்குகிறார். தயாரிப்பாளர் எஸ். லட்சுமணன் குமார் தயாரிக்கும் இந்தப் படத்தின் பூஜை மற்றும் பிற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
'ஜெயம்', 'எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி', 'உனக்கும் எனக்கும்', 'சந்தோஷ் சுப்பிரமணியம்', 'வேலாயுதம்', 'தனி ஒருவன்' உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கிய மோகன் ராஜாவும், நடிகர் கார்த்தியும் முதன்முறையாக இணைவது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Karthi teams up with Mohan Raja for the first time Official announcement of his 31st film