“நொடிக்கு நொடி காசு ஏறும்!” – தனுஷ், வடிவேலு இடையே நடந்த அந்த சம்பவம்.. 15 ஆண்டுகளுக்கு பிறகு D56 படத்தில் இணைந்த பின்னணி
The meter ticks up every second That incident involving Dhanush and Vadivelu The backstory behind their reunion in the film D56 after 15 years
தனுஷ் நடிப்பில் உருவாகும் அடுத்தடுத்த படங்கள் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில், தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அவர் நடிக்கும் புதிய படமும் கவனம் பெற்றுள்ளது. தற்காலிகமாக D56 என அழைக்கப்படும் இப்படத்தில் வடிவேலு, ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். குறிப்பாக தனுஷும் வடிவேலுவும் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே படத்தில் இணைவது திரையுலகில் பேசுபொருளாகியுள்ளது.
D56 படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. கிராமத்து பின்னணியில் உருவாகும் கதையாக இப்படம் இருக்கும் என கூறப்படுகிறது. பூஜையின்போது வடிவேலு பேசியபோது, இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்திருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். மேலும், தங்களுக்குள் இணைந்து பணியாற்ற முடியாமல் போனதற்கு திரைத்துறையில் சிலர் செய்த முயற்சிகளும் காரணமாக இருந்ததாக அவர் தெரிவித்திருந்தார்.
“எங்கள் ஃபீல்டில் இரண்டு பேரும் பிரிவதற்கு அத்தனை வேலைகளையும் பார்ப்பார்கள். தீப்பொறியை வைத்து கொளுத்திப்போடுவார்கள். எங்களுக்கு இடையே தீப்பந்தத்தையே போட்டுவிட்டார்கள்” என்று வடிவேலு கூறியிருந்தார். அதேநேரத்தில், D56 அரசியல் படம் கிடையாது என்றும், வித்தியாசமான கதையைக் கொண்ட படம் என்றும், கதையை கேட்டபோது பெருமையாகவும் ஆச்சரியமாகவும் உணர்ந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தனுஷ் மற்றும் வடிவேலு இடையே கடந்த காலத்தில் ஏற்பட்டதாக கூறப்படும் மோதல் குறித்து பத்திரிகையாளர் செய்யாறு பாலு தனது யூடியூப் சேனலில் பேசியுள்ளார். அவரது கூற்றுப்படி, தனுஷ் நடித்த ‘படிக்காதவன்’ திரைப்படத்தில் முதலில் வடிவேலுவும் நடித்திருந்தார். ஆனால், சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், ஒரு சம்பவத்தைத் தொடர்ந்து அவர் அந்தப் படத்திலிருந்து விலகியதாக கூறப்படுகிறது.
படப்பிடிப்பில் வடிவேலு நடிக்கும் காட்சிக்கு தொடர்ந்து ரீ-டேக் சென்றதாகவும், அப்போது இயக்குநர் சுராஜ், லைட் மேனை பார்த்து “சீக்கிரம் லைட்டிங் செட் பண்ணுங்க. வடிவேலு அண்ணனுக்கு நொடிக்கு நொடி காசு ஏறும்” என்று கூறியதாகவும் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார். இந்தக் கருத்து வடிவேலுவுக்கு கோபத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதன்பிறகும் காட்சியை படமாக்க முயன்றபோது மீண்டும் ரீ-டேக் சென்றதாகவும், அப்போது தனுஷ் இயக்குநரிடம் இருந்த மைக்கை வாங்கி, “அண்ணே, இயக்குநர் சொன்ன மாதிரி நடித்துவிடுங்கள் அண்ணே” என்று வடிவேலுவிடம் கூறியதாகவும் செய்யாறு பாலு தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். இதனால் மேலும் கோபமடைந்த வடிவேலு, அதே உடையுடன் படப்பிடிப்பு தளத்தைவிட்டு வெளியேறியதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதுதான் தனுஷுக்கும் வடிவேலுவுக்கும் இடையே ஏற்பட்டதாக கூறப்படும் பிரச்னைக்கு முக்கிய காரணம் என்றும் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார். எனினும், இந்த சம்பவம் தொடர்பாக தனுஷ் தரப்பில் இருந்து இதே விளக்கம் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, பல ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷும் வடிவேலுவும் D56 படத்தின் மூலம் இணைந்துள்ளனர். கடந்த காலத்தில் நடந்ததாக கூறப்படும் சம்பவங்களை கடந்து இருவரும் தற்போது ஒரே படத்தில் பணியாற்றுவது ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், D56 படத்தின் படப்பிடிப்புக்காக கருப்பண்ணசாமி கோயிலில் கேமரா வைக்க முயன்றபோது அனுமதி கிடைக்காததால், பின்னர் கோயிலுக்கு வெளியே படப்பிடிப்பு நடத்த அனுமதி பெறப்பட்டதாகவும் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார். படத்தின் பூஜையின்போது கிடா விருந்து நடைபெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
D56 ஒரு கிராமத்து கதையை மையமாகக் கொண்ட படமாக உருவாகி வருவதாக கூறப்படும் நிலையில், தனுஷ்–வடிவேலு கூட்டணி படத்தின் முக்கிய சிறப்பம்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல ஆண்டுகளாக இணைந்து நடிக்காமல் இருந்த இருவரும் தற்போது ஒரே படத்தில் இணைந்திருப்பதால், D56 குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
English Summary
The meter ticks up every second That incident involving Dhanush and Vadivelu The backstory behind their reunion in the film D56 after 15 years