தாராபுரத்தில் சிபிஐ-யின் இருசக்கர வாகனப் பேரணிக்கு அனுமதி மறுப்பு; ஆளும் கட்சியின் அதிகார ஆணவப் போக்கு; மு.வீரபாண்டியன் கண்டனம்..! - Seithipunal
Seithipunal


''இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடத்தப்படவிருந்த இருசக்கர வாகனப் பேரணிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் அனுமதி மறுத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. ஆளும் கட்சிக்கு ஒரு விதி, எதிர்க்கட்சிக்கு வேறு விதி என்ற அணுகுமுறை ஜனநாயகத் தேர்தல் நடைமுறைக்கு எதிரானது'' என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது;

''தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடத்தப்படவிருந்த இருசக்கர வாகனப் பேரணிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் அனுமதி மறுத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. அதே நாளில், அதே வழித்தடத்தில் ஆளும் கட்சியான தவெகவுக்கு பேரணி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், அதே வழித்தடத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தவிருந்த இருசக்கர பேரணிக்கு மட்டும் அனுமதி மறுப்பதற்கு “அதே நாளில் ஆளும் கட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என்பதையே காரணமாகக் கூறுவது எந்த வகையிலும் நியாயமானதோ சட்டரீதியானதோ அல்ல.

விதிமுறைகள் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சமமாகப் பொருந்த வேண்டும். ஒரு கட்சிக்கு அனுமதி வழங்கிவிட்டு, அதே நிபந்தனைகளில் மற்றொரு கட்சிக்கு அனுமதி மறுப்பது தேர்தல் களத்தில் சமமான வாய்ப்பை பறிக்கும் செயலாகும்.

தேர்தல் ஆணையத்தின் மாதிரி நடத்தை விதிகள் தேர்தல் நடவடிக்கைகளில் “சமச்சீர் களம்” உறுதி செய்யப்பட வேண்டும் என்பதைத் தெளிவாக வலியுறுத்துகிறது.

ஒரே பாதையில் பல கட்சிகள் பேரணி நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டால், அவற்றுக்கிடையே ஒருங்கிணைப்பு செய்து, போக்குவரத்துக்கும் சட்டம் - ஒழுங்குக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் ஏற்பாடு செய்வதே சரியான நடைமுறையாகும்.

இதைப் பற்றி தொடர்பு கொண்டு கேட்டபொழுது, தவெக பிரச்சாரத்துக்கு அனுமதி அளித்துவிட்ட காரணத்தால், மற்றவர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டாம் என்று எழுத்துப்பூர்வமான ஆணை தமிழ்நாடு காவல் துறை அனுப்பியுள்ளதாக அலுவலக அதிகாரி தெரிவித்தார்.

ஜனநாயகம் என்பது ஆளும் கட்சிக்கு மட்டுமேயான உரிமை அல்ல. எதிர்க்கட்சிகளின் குரலையும் அரசியல் உரிமைகளையும் பாதுகாப்பதே உண்மையான ஜனநாயகத்தின் அடையாளம். காவல் துறையின் அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசியல் எதிர்ப்பைக் கட்டுப்படுத்தும் எந்த முயற்சியும் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆளும் கட்சியின் அதிகார ஆணவப் போக்குக்கும் ஜனநாயக உரிமைகளை நசுக்கும் எதேச்சதிகாரப் போக்குக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தனது வலுவான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. தேர்தல் ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும், அனைத்துக் கட்சிகளுக்கும் சமமான வாய்ப்பை உறுதி செய்யவும் இந்தியத் தேர்தல் ஆணையம் உடனடியாகத் தலையிட வேண்டும்.

இது வெறும் ஒரு பேரணிக்கான அனுமதி தொடர்பான பிரச்சினை அல்ல. தேர்தல் நிர்வாகத்தின் நடுநிலைமை, நம்பகத்தன்மை மற்றும் போட்டியிடும் அனைத்து கட்சிகளுக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்படுகிறதா என்ற அடிப்படை ஜனநாயகக் கேள்வியாகும்.

தேர்தல் நடத்தும் அலுவலர் உடனடியாக இந்த முடிவை மறுபரிசீலனை செய்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அதே நாளில், சட்டம் - ஒழுங்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு இருசக்கர வாகனப் பேரணி நடத்த அனுமதி வழங்க வேண்டும்.

ஆளும் கட்சிக்கு ஒரு விதி, எதிர்க்கட்சிக்கு வேறு விதி என்ற அணுகுமுறை ஜனநாயகத் தேர்தல் நடைமுறைக்கு எதிரானது. தேர்தல் அதிகாரிகள் எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவாகவோ எதிராகவோ இருப்பதாகத் தோன்றாத வகையில், முழுமையான நடுநிலையுடனும், வெளிப்படைத்தன்மையுடனும் செயல்பட வேண்டும்.

இப்பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இருசக்கர வாகனப் பேரணி நடத்திட அனுமதி வழங்கிட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, இந்தியத் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.'' என அறிக்கையில் மு.வீரபாண்டியன் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

M Veerapandian condemns the denial of permission for the CPIs two wheeler rally in Dharapuram


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->