''தவெக தூய சக்தி அல்ல, திருட்டு சக்தி; ''இந்தியாவிலேயே ஒரு மோசமான ஆட்சி தமிழகத்தில்தான்''; மதுராந்தகத்தில் இபிஎஸ் பிரச்சாரம்..! - Seithipunal
Seithipunal


மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத்தை ஆதரித்து அச்சிறுப்பாக்கம் பகுதியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அங்கு அவர் பேசுகையில் கூறியதாவது;

''இந்த தேர்தல் எதற்காக வந்தது என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். உங்களுடைய உழைப்பால், அதிமுக வெற்றிபெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் மக்களின் வாக்குகளால் 2026 தேர்தலில் வெற்றி பெற்றார்.

ஆனால், வெற்றி பெற்றபிறகு அவருக்காக உழைத்த நிர்வாகிகளையும் மறந்துவிட்டார். ஓட்டுப் போட்ட மக்களையும் மறந்துவிட்டார். நம்முடைய கட்சி சார்பில் வெற்றிபெற்றவர், ராஜினாமா செய்டுவிட்டு, அந்த (தவெக) கட்சியில் போட்டியிடுகிறார். இது, ஜனநாயகப் படுகொலை.

கூட்டணிக் கட்சியினரும் சொந்தக் கட்சியினரும் அவருக்காக பாடுபட்டு, நமக்கு சேவை செய்வார் என்று எண்ணினால், அவர் விலை போய்விட்டார். நீங்கள் போட்ட ஓட்டை விற்றுவிட்டார். அவருக்கு தக்க தண்டனை வழங்குவீர்களா? இனி, யாருக்கும் இப்படியொரு எண்ணம் வராத வகையில் தண்டனை வழங்குவீர்களா?

தவெக கட்சியினர் சொல்கிறார்கள். அவர்கள் கட்சித் தலைவர் முகத்தைப் பார்த்தால் ஓட்டு விழுந்துவிடுமாம். அப்படியென்றால் எதுக்கு அவர் இரண்டு நாட்களாக தெருத்தெருவாகப் போகிறார்? மக்கள் ஒரு முறை ஏமாந்துவிட்டார்கள். இனியும் ஏமாற மாட்டார்கள். அந்த கட்சியில் ரீல், ரீல்ஸ் ஆகிய இரண்டும்தான் இருக்கிறது. இதை வைச்சுத்தான் ஆட்சி அமைத்திருக்கிறார்கள். இவர்கள் நமது எம்எல்ஏ.க்களை திருடியிருக்கிறார்கள்.

அந்த கட்சியின் தலைவர் வீடு வீடா போய் ஓட்டு கேட்கிறார். ஊர் ஊராகப் போய் ஓட்டு கேட்கிறார். நேத்து டிராக்டர் ஓட்டியிருக்கிறார். அந்த அளவுக்கு இறங்கி வந்துவிட்டார்.

நான் விவசாயி. சொந்தமாக டிராக்டர் வைத்திருக்கிறேன். டிராக்டர் ஓட்டிக்கொண்டு இருக்கிறேன். வயலில் இறங்கிவிட்டால் விவசாயியாக முடியாது. விவசாயிக்குத் தேவையான திட்டங்களைக் கொடுக்க வேண்டும். விவசாயத் தொழிலாளர்களுக்குத் தேவையான உதவிகளை செய்ய வேண்டும். அப்படி ஏதாவது செய்திருக்கிறாரா?

முதல்வர் விஜய் இப்போ கடையில போய் டீ குடிக்கிறார். ஆனால் அவர் டீ குடிக்கவே இல்லை. அப்படியே வாயிலே வைச்சுட்டுப் போயிட்டார். இப்பத்தான் டீ கடையைப் பார்க்கிறார். இதுவரைக்கும் வெளியே வந்ததே இல்லை. இப்பத்தான் கிராமத்துக்கு வர்றார். நான் எந்தெந்த இடத்துல எல்லாம் பேசினேனோ, அங்கெல்லாம் வந்து பார்த்துட்டுப் போயிருக்கிறார். பேசலை, சும்மா பார்த்துட்டுத்தான் போயிருக்கிறார்.

ஜனநாயகப் படுகொலைக்கு நீதி கேட்டு உங்களை சந்திக்கிறேன். சரியான நீதி வழங்குவீர்களா..? இந்திய துணைக் கண்டமே அதிர்கின்ற அளவுக்கு நீதி வழங்கவேண்டும்.

இந்த தொகுதிக்கு தவெக பொறுப்பாளரா ஒருவரை நியமிச்சிருக்காங்க. தவெக தலைமையில் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி அமைச்சிருக்காங்க. அந்த மேடையில் எல்லா கட்சியினரும் இருக்கிறார்கள். வெவ்வேறு பாதை என்றாலும் எல்லோருக்கும் ஒரே கொள்கை என்கிறார்.

இதே மாதிரிதான் திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், ஐயூஎம்எல், மதிமுக, காங்கிரஸ் இருந்தது. அப்போதும் இப்படித்தான் சொன்னார்கள். எல்லோரும் ஒத்த கொள்கை உள்ளவர்கள் என்றார்கள். ஆனால், என்னாச்சு. மூட்டை நெல்லிக்காய் மூட்டை கொட்டியது போன்று எல்லாமே சிதறிப் போச்சு. ஆனால், அதிமுக அப்படியல்ல. கூட்டணி வேறு, கொள்கை வேறு.

கொள்கை நிரந்தரமானது. கூட்டணி அந்தந்த சூழல், தேர்தலுக்கு ஏற்ப அமைக்கப்படுவது. ஆனால், அந்த கட்சிகள் திமுக கூட்டணியில் இருந்தபோதும் ஒத்த கொள்கை என்றார்கள். தவெகவிலும் ஒத்த கொள்கை என்கிறார்கள்.

அது எப்படிங்க இரண்டு கட்சியிலும் ஒத்த கொள்கையுடன் இருக்கமுடியும்? இப்படி இரட்டை வேடம் போடும் கட்சிதான், இந்த தேர்தலில் நம் வேட்பாளரை எதிர்த்து நிற்கிறார். அவரை டெபாசிட் இழக்கச் செய்வீர்களா?

தவெக தலைவர் விஜய் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிகளை விமர்சனம் செய்தார். கல்லாப்பெட்டி கூட்டணி என்றார். திமுக கூட்டணியில் இருந்த விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சியினர், காங்கிரஸ், ஐ.யு.எம்.எல். எல்லோரும் அந்தர்பல்டி அடித்து விஜய்யுடன் கூட்டணி வைத்திருக்கிறார்கள். இவர்களை என்ன கூட்டணி என்று சொல்வது? அப்போது கல்லாப்பெட்டி கூட்டணி. இப்போது? இவங்க எல்லாம் நாட்டுக்கு சேவை செய்பவர்களா?

தவெக தலைவர் விஜய், நாங்க வெளிப்படையா இருப்போம், தூய சக்தி என்று சொல்கிறார். எப்போது அவர் நமது எல்எல்ஏ.க்களை திருடினாரோ, அப்போது அது, திருட்டு சக்தியாக மாறிவிட்டது. நாம மட்டும் அவர்களை விமர்சிக்கவில்லை. எந்த கட்சி விஜய் ஆட்சி அமைக்கவேண்டும் என்று ஆதரவு கொடுத்ததோ, அந்த கம்யூனிஸ்ட் கட்சி இங்கு அவரை எதிர்த்து போட்டியிடுகிறது.

கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் சொல்கிறார். வீடு வீடாக நாங்கள் நோட்டீஸ் கொடுக்கப்போனோம். நோட்டீஸை பார்த்துவிட்டு பணம் எங்கே என்று கேட்டிருக்கிறார்கள். யார் கொடுப்பது என்று கேட்டால், தவெக-வில் அதிக பணம் தருகிறார்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். இதுவா தூய கட்சி..? அது, நாட்டு மக்களை ஏமாற்றும் கட்சி.

தவெக தெருத்தெருவாகப் போனாலும் ஜெயிக்க முடியாது என்று கம்யூனிஸ்ட் கட்சி சொல்கிறது. கூட்டணியில் இருப்பவர்களே அப்படி சொல்கிறார்கள் என்றால், இந்த ஆட்சியின் லட்சணம் எப்படி என்று எண்ணிப் பாருங்கள்.

இது ஒரு மோசமான ஆட்சி. இந்தியாவிலேயே ஒரு மோசமான ஆட்சி தமிழகத்தில்தான் நடந்துகொண்டிருக்கிறது. அதனால்தான், ஆதரவு கொடுத்த கட்சியின் செயலாளரே இப்படிப்பட்ட விமர்சனம் செய்கிறார். அதனால், இந்த கட்சி நிலைக்காது.

கரண்ட் பில் ஏறுது. எப்படித்தான் கரண்ட் பில் கணக்குப் போடுகிறார்கள் என்பதே தெரியவில்லை. ஆயிரம் ரூபாய் வந்த இடத்தில் 3 ஆயிரம் ரூபாய் பில் வருகிறது. கரண்ட்டை தொட்டாத்தான் ஷாக் அடிக்கும். இப்போது கரண்ட் பில் கேட்டாலே ஷாக் அடிக்கிறது. 

இதற்கு ஒரு தீர்வு காண்பதற்கு அரசுக்கு வக்கில்லை. ஆட்சிக்கு வரும்போது மின்கட்டணத்தை குறைப்போம் என்றார்கள். குறைத்தார்களா..? இந்த ஆட்சியில் லஞ்சமே இல்லையாம். லஞ்சமே இல்லை என்று பச்சைப் பொய் சொல்கிறார். எந்த துறையிலாவது லஞ்சம் இல்லாமல் காரியம் நடக்கிறதா? 

இதே ஆட்சியின் லஞ்ச ஒழிப்புத்துறை 32 மாநகராட்சி, நகராட்சி அலுவலகத்தில் சோதனை நடத்தி 1 கோடியே 73 லட்சம் ரூபாய் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இதில் டிஜிட்டல் பரிவர்த்தனையும் நடந்திருக்கிறது என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். 

32 இடத்திலேயே இவ்வளவு என்றால், தமிழகம் முழுவதும் எவ்வளவு லஞ்சம் வாங்கியிருப்பார்கள். லஞ்சம் வாங்கிய பணம் எல்லாம் எங்கே போகிறது? போகவேண்டிய இடத்துக்குப் போகிறது. இவர்கள் நேர்மையான ஆட்சியாம்.

ஒரு மூட்டை நெல் எடை போட 70 ரூபாய் லஞ்சம் வாங்குகிறார்கள். இது தூய்மையான அரசாங்கமா? விவசாயிகள் வியர்வையை ரத்தமாக சிந்தி உழைத்து நெல்மணிகளை மூட்டையில் கட்டி எடுத்துவந்தால், அங்கு 70 ரூபாய் அபகரிக்கிறார்கள் என்றால், இது எப்படிப்பட்ட அரசாங்கம்..?

நூறு நாள் வேலைத் திட்டத்தை மத்திய அரசு 125 நாட்களாக உயர்த்தியது. தவெக தேர்தல் அறிக்கையில் 150 நாட்களாக உயர்த்துவோம் என்று சொன்னார்கள். சம்பளத்தை உயர்த்தினார்களா.? வேலை செய்தவர்களுக்கு இன்னமும் சம்பளம் கிடைக்கவில்லை என்று புகார் தெரிவிக்கிறார்கள். இப்படி ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் அரசாங்கம் தவெக அரசாங்கம்.

இப்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குரியதாகிவிட்டது. ஒரே நாளில் எட்டு கொலை என்று பத்திரிகையில் செய்தி வருகிறது. விஜய் கையில் காவல் துறை இருக்கும்போது இந்த 5 மாதத்தில் 300 கொலை நடந்திருக்கிறது. 250 பாலியல் சீண்டல் நடந்துள்ளது. இதை கட்டுப்படுத்த கையாலாகாத அரசாங்கம். மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை.

பரந்தூர் விமான நிலையம் வேண்டாம்னு போராட்டம் செய்தார். விவசாயிக்கு ஆதரவாக இருக்கிறார் என்று நினைத்தேன். ஆட்சிக்கு வந்ததும், விவசாயிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நிலத்தை சிப்காட்டுக்குக் கொடுக்கிறார்.

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு நிலைப்பாடு, ஆட்சிக்கு வந்தபிறகு ஒரு நிலைப்பாடு என்று இரட்டை வேடம் போடுகிறார். வேறு இடத்தில் விமான நிலையம் என்று அறிவிக்கிறார். எங்கே என்றாலும் நிலம் எடுத்துத்தானே ஆகவேண்டும். ஆகாயத்திலா விமான நிலையம் கட்ட முடியும்..?

இன்றைக்கு ஒன்றரை லட்சம் கோடி கடன் வாங்கியிருக்கிறார். இதனை யார் கட்டுவது..? நீங்கள்தான் கட்ட வேண்டும். ஏற்கெனவே 10 லட்சம் கோடி கடன். அடுத்த வருடம் இன்னும் கடன் வாங்குவார். ஐந்து வருடம் இந்த ஆட்சி தொடர்ந்தால் 20 லட்சம் கோடி கடனாகிவிடும். வட்டி மட்டும் ஒன்றரை லட்சம் கோடி கட்ட வேண்டியிருக்கும். இப்படி ஒரு நிர்வாகத் திறனற்ற ஆட்சி வேண்டுமா?

இந்த ஆட்சி வந்து 5 மாதமாகிவிட்டது. ஏதாவது புதிய திட்டம் அறிவித்தார்களா..? பழைய திட்டங்களுக்கு முன்னே வெற்றி என்பதை மட்டும் சேர்த்துக்கொண்டார்கள். காலை உணவுத் திட்டத்தை தனியார் பங்களிப்போடு சென்னையில் நாங்கள் தொடக்கினோம். 

அதற்கு திமுக அரசாங்கம் ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டது. இப்போது, அந்த திட்டத்திற்கு வெற்றி என்று பெயரை மாற்றிக்கொண்டார்கள். பேர் மாற்றுவதற்கு நோபல் பரிசு என்றால் விஜய்க்கு கொடுப்பது பொருத்தமாக இருக்கும். வேறு எந்த சாதனையும் இல்லை என்று கடுமையாக தவெக அரசை விமர்சித்து பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

EPS campaigns in Maduranthakam stating that Tamil Nadu has the worst governance in all of India


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->