தயங்கினார் ரஜினிகாந்த்! காமராஜருக்குப் பிறகு நேர்மையான முதல்வர் விஜய் - பாடலாசிரியர் விவேகா பேச்சு! - Seithipunal
Seithipunal


சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் விஜயை பாராட்டி பாடலாசிரியர் விவேகா பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. காமராஜருக்குப் பிறகு தமிழ்நாடு நேர்மையான முதலமைச்சரை தற்போது தான் பெற்றுள்ளது என்றும், விஜயின் ஆட்சிக்கு மக்கள் துணை நிற்க வேண்டும் என்றும் அவர் பேசியுள்ளார்.

தருமபுரியில் நடைபெற்ற ஒரு விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பேசிய விவேகா, முதலமைச்சர் விஜயின் ஆட்சி குறித்தும், அவரது அரசியல் பயணம் குறித்தும் கருத்து தெரிவித்தார்.

அப்போது பேசிய அவர், அரசியலுக்கு வந்த உடனே முதலமைச்சராக முடியுமா என்று பலரும் விமர்சித்த நிலையில், முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று விஜய் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதாக குறிப்பிட்டார். வெறும் பேச்சால் அல்ல, செயலால் தன்னை நிரூபித்துள்ளார் என்றும் அவர் பாராட்டினார்.

மேலும், ஊழலற்ற ஆட்சியை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் விஜய் செயல்பட்டு வருவதாகவும், அந்த முயற்சிக்கு மக்களும் முழுமையாக ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் விவேகா கேட்டுக் கொண்டார்.

விழாவில் அவர், "தொட மாட்டேன், தொட விடமாட்டேன், தொட்டவனையும் விடமாட்டேன்" என்ற விஜயின் நிலைப்பாட்டை மேற்கோள் காட்டி, அதை முன்னாள் அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கனின் "Of the People, By the People, For the People" என்ற கருத்துடன் ஒப்பிட்டுப் பேசினார்.

அதேபோல், நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார். அரசியல் அமைப்பு சீர்குலைந்திருப்பதால் அதை மாற்ற முடியுமா என்ற தயக்கத்தை ரஜினிகாந்த் வெளிப்படுத்தியிருந்ததாகக் கூறிய அவர், அதே அமைப்பை மாற்ற முயற்சிக்கும் துணிச்சலை விஜய் காட்டியிருப்பதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய விவேகா, "காமராஜருக்குப் பிறகு தமிழ்நாடு பல திறமையான முதலமைச்சர்களைப் பார்த்துள்ளது. ஆனால், காமராஜருக்குப் பிறகு தற்போது தான் ஒரு நேர்மையான முதலமைச்சரை தமிழ்நாடு பெற்றுள்ளது" என்று கூறினார்.

விவேகாவின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. ஒருபுறம் விஜய் ஆதரவாளர்கள் அவரது கருத்துக்கு வரவேற்பு தெரிவித்து வரும் நிலையில், மறுபுறம் ரஜினிகாந்தை ஒப்பிட்டு பேசியதற்கு அவரது ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rajinikanth hesitated After Kamaraj Vijay would be an honest Chief Minister Lyricist Viveka remarks


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...




Seithipunal
--> -->