வெறுப்பு அரசியலை கைவிடுங்கள்!கவுன்சிலர் சீட்டாவது கிடைக்கும்! சீமானுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி!
Give up the politics of hate You might at least get a councillor seat Minister Ramesh hits back at Seeman
திருச்சி: "இடைத்தேர்தலை சந்திக்க வெறியோடு காத்திருக்கிறேன்" என்று கூறிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் பதிலடி கொடுத்துள்ளார். வெறுப்பு அரசியலை கைவிட்டு வெற்றியை நோக்கி செயல்பட்டால், குறைந்தபட்சம் உள்ளாட்சித் தேர்தலிலாவது வெற்றி பெற வாய்ப்புள்ளது என்று அவர் விமர்சித்தார்.
மாமன்னர் தீரன் சின்னமலையின் 212-வது நினைவு நாளையொட்டி, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள போக்குவரத்துக் கழக தலைமை அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அமைச்சர் ரமேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.
முதல்வர் விஜய் தலைமையிலான அரசு, நாடு முழுவதும் தலைவர்கள் பாராட்டும் வகையில் செயல்பட்டு வருவதாகவும், வரலாற்று மாற்றங்களை ஏற்படுத்தி வருவதாகவும் அமைச்சர் கூறினார். "மக்கள் பெரும்பான்மையாக வாக்களித்து ஆட்சிக்கு கொண்டு வந்துள்ளனர். வாக்களிக்காதவர்கள்கூட இன்று அரசின் செயல்பாடுகளை பாராட்டும் நிலை ஏற்பட்டுள்ளது" என்றார்.
முன்னாள் முதல்வர் ஸ்டாலின், "முதல்வர் விஜய் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்" என்று கூறியிருப்பதற்கு பதிலளித்த அமைச்சர், "உண்மையில் யார் தனிமையில் இருக்கிறார்கள் என்பதை மக்களே அறிவார்கள். சட்டமன்றத்தில் பேசியவர் இன்று வீட்டில் இருந்து சட்டமன்ற நிகழ்வுகளை பார்க்கும் நிலைக்கு வந்துள்ளார்" என்று விமர்சித்தார்.
மேகதாது மற்றும் காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தாதது குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார். "எல்லாவற்றையும் பேசி செய்வதற்குப் பதிலாக செயலில் காட்டுவது முக்கியம். எங்கள் முதல்வர் அதைத்தான் செய்து வருகிறார்" என்றார்.
திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் தரிசனத்திற்காக லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகார் குறித்து பேசிய அமைச்சர், "இந்த விவகாரம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் யார் மீதும் பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
சீமான் கூறிய "இடைத்தேர்தலை சந்திக்க வெறியோடு காத்திருக்கிறேன்" என்ற கருத்துக்கு பதிலளித்த அவர், "15 ஆண்டுகளாக பயிற்சிதான் என்று கூறிக் கொண்டிருக்கிறார். வெறுப்பு அரசியலை விட்டுவிட்டு, உண்மையாக வெற்றி பெறும் நோக்கத்துடன் செயல்பட்டால், வரும் உள்ளாட்சித் தேர்தலிலாவது வெற்றி பெற வாய்ப்பு இருக்கும்" என்று கூறினார்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பாகவும் அமைச்சர் ரமேஷ் கருத்து தெரிவித்தார். "நான் ஓடி ஒளியவில்லை என்று அவர் கூறுகிறார். அப்படியானால் தைரியமாக களத்தில் நிற்க வேண்டியதுதானே? நீதிமன்றத்தை எதிர்கொண்டு சட்டப்படி போராட வேண்டியதுதானே? இந்த ஆட்சியில் ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் பதிலளிக்க வேண்டியிருக்கும்" என்று தெரிவித்தார்.
English Summary
Give up the politics of hate You might at least get a councillor seat Minister Ramesh hits back at Seeman