திருப்பரங்குன்றத்தில் தீபமேற்றலாம்! உயர்நீதிமன்ற உத்தரவை உடனே அமல்படுத்த வேண்டும் - ராம ரவிக்குமார் அரசுக்கு கோரிக்கை!
Lamps can be lit at Thiruparankundram The High Court order must be implemented immediately Rama Ravikumar urges the government
சென்னை: திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ள நிலையில், அந்தத் தீர்ப்பை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று இந்து தமிழர் கட்சியின் தலைவர் ராம ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை வழங்க உச்சநீதிமன்றம் மறுத்திருப்பது, நீதிமன்றத் தீர்ப்புகளின் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "புதிய நடைமுறைகளை அனுமதிக்க முடியாது" என்ற நிலைப்பாட்டுடன் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மனு தாக்கல் செய்திருப்பது, பல இந்து பக்தர்களிடையே ஏமாற்றத்தையும் கேள்விகளையும் ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறையின் முக்கியப் பொறுப்பு கோவில்களின் நிர்வாகத்தை சிறப்பாக மேற்கொள்வதுடன், பக்தர்களின் வழிபாட்டு உரிமைகள் மற்றும் கோவில் மரபுகளை சட்டத்திற்குட்பட்டு பாதுகாப்பதே என்றும், எனவே நீண்டகால மத வழக்கங்கள் தொடர்பான விவகாரங்களில் பக்தர்களின் நம்பிக்கைகளுக்கும் நீதிமன்ற உத்தரவுகளுக்கும் உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கோவில் உண்டியலில் பக்தர்கள் மற்றும் உபயதாரர்கள் செலுத்தும் காணிக்கைகள், கோவில்களின் பராமரிப்பு, வழிபாட்டு பணிகள் மற்றும் பக்தர்களின் நலனுக்காகவே பயன்படுத்தப்பட வேண்டும் என்ற பொதுமக்களின் எதிர்பார்ப்பு இருப்பதாகவும், எனவே இதுபோன்ற வழக்குகளில் அரசு மற்றும் அறநிலையத்துறையின் நடவடிக்கைகள் வெளிப்படைத்தன்மையுடனும் பொறுப்புடனும் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆட்சிக் காலத்தில் திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் தொடர்பாக எழுந்த சர்ச்சைகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகள் குறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்றதாக குறிப்பிட்டுள்ள அவர், தற்போதைய அரசும் உயர்நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் காட்டக் கூடாது என்றே பக்தர்கள் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை வழங்க மறுத்துள்ள நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தமிழக அரசு காலதாமதமின்றி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், நீதிமன்ற உத்தரவுகளுக்கு முழு மரியாதை செலுத்துவதும், பக்தர்களின் மத உணர்வுகளையும் அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய வழிபாட்டு உரிமைகளையும் பாதுகாப்பதும் அரசின் கடமை என்றும் ராம ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை என்ற வேறுபாடின்றி அனைத்து குடிமக்களின் மத உரிமைகளையும் சமமாகக் காக்கும் நிர்வாகமே ஜனநாயகத்தின் அடிப்படை எனக் குறிப்பிட்ட அவர், திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் தொடர்பாக சட்டத்தின் ஆட்சியையும் நீதிமன்ற உத்தரவுகளையும் தமிழக அரசு முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
English Summary
Lamps can be lit at Thiruparankundram The High Court order must be implemented immediately Rama Ravikumar urges the government