காவிரி நீர் விவகாரம்: கர்நாடகாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு!டெல்லிக்கு பறந்த ஸ்பெசல் டீம்! - Seithipunal
Seithipunal


சென்னை: காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு (CWRC) பிறப்பித்த உத்தரவின்படி தமிழ்நாட்டிற்கு உரிய நீரை கர்நாடக அரசு திறந்துவிடவில்லை என்று குற்றம்சாட்டி, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த ஜூலை 28-ஆம் தேதி நடைபெற்ற காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் 139-வது கூட்டத்தில், ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 12 வரை 15 நாட்களுக்கு பில்லிகுண்டுலுவில் வினாடிக்கு 3,500 கனஅடி (கியூசெக்ஸ்) தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து கர்நாடக அரசு நீரை திறந்துவிட உத்தரவிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, ஜூலை 30-ஆம் தேதி நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 54-வது அவசரக் கூட்டத்திலும் இந்த உத்தரவு உறுதி செய்யப்பட்டது.

ஆனால், ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 2 வரை பில்லிகுண்டுலுவில் தமிழ்நாட்டிற்கு கிடைத்த நீரின் அளவு வினாடிக்கு 158 முதல் 550 கனஅடி வரை மட்டுமே இருந்ததாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 3-ஆம் தேதி நிலவரப்படி, கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹாரங்கி மற்றும் ஹேமாவதி அணைகளில் மொத்தமாக 77.537 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளதாகவும், இதில் பயன்பாட்டுக்குரிய நீர் 67.517 டி.எம்.சி. இருப்பதாகவும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. எனவே, தமிழ்நாட்டிற்கு விகிதாச்சார அடிப்படையில் உரிய நீரை வழங்குவதில் கர்நாடகாவுக்கு எந்த சிரமமும் இருக்காது என தமிழக அரசு வாதிடுகிறது.

மேலும், அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், விகிதாச்சாரப்படி தமிழ்நாட்டிற்கு 26.954 டி.எம்.சி. நீர் கிடைக்க வேண்டிய நிலையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட 4.536 டி.எம்.சி. அளவும் முழுமையாக வழங்கப்படவில்லை என்றும் அரசு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த சூழலில், தமிழ்நாட்டிற்கு உரிய நீரை வழங்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், விகிதாச்சாரப்படி கிடைக்க வேண்டிய 26.954 டி.எம்.சி. நீரைப் பெற உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரி, மூத்த சட்ட நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

தமிழ்நாட்டிற்கு உரிய காவிரி நீரை விரைவாகப் பெற்றுத் தருவதற்காக முதலமைச்சர் விஜயின் அறிவுறுத்தலின்படி இந்த சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cauvery water dispute Tamil Nadu government files petition against Karnataka in the Supreme Court special team flies to Delhi


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...




Seithipunal
--> -->