ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு போற்றுதலுக்குரியது...! - நல்லாசிரியர்களை பாராட்டிய மாணிக்கம் தாகூர்
dedication teachers commendable Manickam Tagore praises good teachers
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், மாணவர்களின் எதிர்காலத்தை உருவாக்குவதில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் சிறந்த ஆசிரியர்களைப் பாராட்டி, அவர்களின் கல்விச் சேவை தொடர்ந்து சிறக்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது,"தென்காசி மாவட்டம் புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வரும் தங்கராஜ், பள்ளியின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக தனது சொந்த பணத்தில் ரூ.2 லட்சம் செலவு செய்துள்ளார்.

மேலும், பொதுமக்களின் பங்களிப்புடன் பள்ளியில் நவீன வகுப்பறையையும் உருவாக்கியுள்ளார்.கிராமப்புறங்களைச் சேர்ந்த மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் முதல் தலைமுறை மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தில் அவர் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார். கதை சொல்லுதல், பட அட்டைகள், ஒலி-ஒளி கருவிகள் உள்ளிட்ட செயல்வழிக் கற்றல் முறைகளை பயன்படுத்தி மாணவர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் கற்பித்து வருகிறார்.
மேலும், மாணவர் அமைச்சரவை மூலம் பள்ளியில் காய்கறித் தோட்டத்தை உருவாக்கி, அதில் விளையும் காய்கறிகளை சத்துணவுக்குப் பயன்படுத்தும் முயற்சியையும் மேற்கொண்டுள்ளார். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வித் துறையில் பல்வேறு புதுமையான முயற்சிகளை தொடர்ந்து செயல்படுத்தி வருவது பாராட்டுக்குரியது.
மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள PM SHRI கேந்திரிய வித்யாலயா எண் 2 பள்ளி முதல்வர் அமுதா, கேந்திரிய வித்யாலயா அமைப்பில் 22 ஆண்டுகளுக்கும் மேலாக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறார்.
முன்னாள் தேசிய மாணவர் படை மாணவியான அவர், மாணவர்களிடம் கல்வியுடன் சமூகப் பொறுப்புணர்வையும் வளர்த்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக அருகிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளைத் தத்தெடுத்து, அங்கு பயிலும் மாணவர்களுக்கு சிறந்த கற்றல் வாய்ப்புகள் கிடைக்கவும் நவீன கற்பித்தல் நடைமுறைகள் சென்றடையவும் உதவி செய்து வருகிறார்.
மேலும், முதியோர் இல்லங்களுக்குச் சென்று சேவை செய்வதன் மூலம் மாணவர்களுக்கு சமூக அக்கறை மற்றும் மனிதநேயத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து வருகிறார்.புதுச்சேரி மேட்டுப்பாளையம் வி.வி.ஆர்.எஸ். அரசு உயர்நிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியர் கணேசன், 34 ஆண்டுகளாக கல்விச் சேவையில் ஈடுபட்டு வருகிறார்.
மாணவர்களுக்கு அறிவியல் பாடத்தை எளிமையாகவும் ஆர்வமூட்டும் வகையிலும் கற்றுக்கொடுக்கும் நோக்கில், நாடகம் மற்றும் விளையாட்டு போன்ற செயல்வழி முறைகளுடன் நவீன தொழில்நுட்ப கருவிகளையும் இணைத்து பயன்படுத்தி வருகிறார்.
கைப்பேசி செயலிகள், தொடர்பாடல் தொலைக்காட்சி, இணையவழிப் படிவங்கள் உள்ளிட்ட பல்வேறு நவீன கருவிகளைப் பயன்படுத்தி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தி வருகிறார். இவரது கல்விச் சேவையை அங்கீகரிக்கும் வகையில் ஏற்கனவே மாநில அளவிலும் சர்வதேச அளவிலும் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக தங்களது சொந்த நேரத்தையும் உழைப்பையும் அர்ப்பணித்து, எதிர்கால தலைமுறையை சிறப்பாக உருவாக்கி வரும் இந்த நல்லாசிரியர்களின் சேவை உண்மையிலேயே போற்றுதலுக்குரியது.
தேசத்தின் எதிர்காலமான மாணவர்களை அறிவாலும், திறமையாலும், சமூக அக்கறையாலும் செதுக்கும் இவர்களின் தன்னலமற்ற கல்விப் பணி மேலும் சிறந்து, பல தலைமுறை மாணவர்களுக்கு வழிகாட்டியாக அமைய வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன் " என மாணிக்கம் தாகூர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
English Summary
dedication teachers commendable Manickam Tagore praises good teachers