விவசாயிகளுக்கு நிதி இல்லை... எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வாங்க மட்டும் பணமா...? - த.வெ.க. அரசை சாடிய உதயநிதி ஸ்டாலின்
Farmers dont have money MLAs only have money to buy cars Udhayanidhi Stalin slams Tvk government
தஞ்சாவூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், த.வெ.க. அரசின் செயல்பாடுகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது,"த.வெ.க. ஆட்சியில் விவசாயிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். விவசாயப் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்வதற்கு நிதி இல்லை என்று அரசு தெரிவிக்கிறது. அதேபோல், வறட்சி நிவாரணம் கோரி விவசாயிகள் முன்வைத்த கோரிக்கைகளுக்கும் இதுவரை உரிய பதில் அளிக்கப்படவில்லை.

விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நிதி இல்லை என்று கூறும் அரசு, எம்.எல்.ஏ.க்களுக்கு கார்கள் வழங்குவதற்கு மட்டும் நிதி ஒதுக்குவது ஏன்? என்று அவர் கேள்வி எழுப்பினார்.மக்கள் மற்றும் விவசாயிகளின் முக்கியப் பிரச்சினைகள் தொடர்பாக சட்டப்பேரவையில் கேள்விகள் எழுப்பப்பட்டாலும், அவற்றுக்கு உரிய பதில்கள் கிடைப்பதில்லை என்று உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
முதலமைச்சர் கேள்விகளுக்கு நேரடியாக பதில் அளிக்காமல் இருப்பதாகவும், சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் கேள்விக்கு தொடர்பில்லாத வகையில் பதிலளித்து வருவதாகவும் அவர் விமர்சித்தார்
.தேர்தலின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை த.வெ.க. அரசு நிறைவேற்றவில்லை என்றும் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தொடர்பாக கேள்விகள் எழுப்பப்படும்போது, முந்தைய அரசு அரசின் கஜானாவை காலி செய்துவிட்டு சென்றதாக கூறி பிரச்சினையை திசைதிருப்பும் முயற்சியில் அமைச்சர்கள் ஈடுபடுவதாக அவர் விமர்சித்தார்.
மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக, வேறு விவகாரங்களை முன்வைத்து பதிலளிப்பது அரசின் தோல்விகளை மறைக்கும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
த.வெ.க. ஆட்சியில் நடைபெறும் செயல்பாடுகளை மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணாமல், தொடர்ந்து கவனத்தை திசைதிருப்பும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டால், அதற்கான பதிலை மக்கள் தேர்தலில் வழங்குவார்கள்.த.வெ.க. ஆட்சியின் செயல்பாடுகளுக்கும், அதன் நிர்வாகப் போக்கிற்கும் மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
English Summary
Farmers dont have money MLAs only have money to buy cars Udhayanidhi Stalin slams Tvk government