PM மோடி வெட்கி தலைகுனிய வேண்டும் - ராகுல்காந்தி கடும் விமர்சனம்!
cong rahul condemn to pm modi
மத்திய பிரதேசம் இந்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் எலிகள் கடித்து இரண்டு பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயரச் சம்பவத்தை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக கண்டித்துள்ளார்.
தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அவர், மத்திய பிரதேசத்தின் மிகப்பெரிய அரசு மருத்துவமனையிலேயே எலிகள் கடித்து இரண்டு குழந்தைகள் பலியாகியுள்ளன. இது சாதாரண விபத்து அல்ல, வெளிப்படையான கொலையே. இத்தகைய கொடூரமும் மனிதாபிமானமற்ற சூழ்நிலையும் கேட்கும்போது உடலெல்லாம் நடுங்குகிறது எனக் குறிப்பிட்டார்.
மேலும், அடிப்படைப் பொறுப்பை நிறைவேற்றத் தவறிய அரசின் அலட்சியத்தால், ஒரு தாயின் மடியில் இருந்து குழந்தை பறிக்கப்பட்டுள்ளது என்றார். சுகாதாரத் துறை தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டதால் அரசு மருத்துவமனைகள் இனி ஏழைகளின் உயிர்காக்கும் இடமாக இல்லை, மாறாக மரணக் குகைகளாக மாறிவிட்டன என அவர் சாடினார்.
விசாரணை நடைபெறும் என கூறுவது வழக்கமான பதிலாகிவிட்டது. ஆனால், புதிதாக பிறந்த குழந்தைகளின் பாதுகாப்பைக் கூட உறுதிசெய்ய முடியாதபோது, அரசை நடத்த என்ன உரிமை இருக்கிறது என கேள்வி எழுப்பினார்.
பிரதமர் மோடியும், மத்திய பிரதேச முதல்வரும் வெட்கத்தில் தலை குனிய வேண்டிய சூழல் இது. ஏழைகளின் சுகாதார உரிமை பறிக்கப்பட்டுள்ள நிலையில், தாய்மார்களின் மடியில் இருந்து குழந்தைகளும் பறிக்கப்படுகின்றன என அவர் குற்றம்சாட்டினார்.
இது ஒவ்வொரு ஏழைக்கும், ஒவ்வொரு குடும்பத்திற்கும், ஒவ்வொரு குழந்தைக்கும் உரிமை கிடைக்க வேண்டிய போராட்டம் எனவும், பிரதமர் நேரடியாக பதில் அளிக்க வேண்டும் எனவும் ராகுல் காந்தி வலியுறுத்தினார்.
English Summary
cong rahul condemn to pm modi