கொங்கு மண்டலத்தில் CM ஸ்டாலின்! இன்னும் சற்று நேரத்தில் புறப்படுகிறார்!
CM MK Stalin Kongu visit
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மற்றும் நாளை திருப்பூர், கோவை மாவட்டங்களில் கள ஆய்வில் ஈடுபடுகிறார். இன்று மாலை 5.25 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்து, அங்கிருந்து கார் மூலம் திருப்பூர் மாவட்டம் உடுமலைக்கு புறப்படுகிறார்.
அங்கு, 2026 சட்டமன்ற தேர்தல் வியூகங்கள், உறுப்பினர் சேர்க்கை, ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முன்னேற்றம் உள்ளிட்ட விவரங்களை கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசிக்கிறார். இரவு உடுமலை அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.
நாளை காலை 10 மணிக்கு உடுமலை வாரச்சந்தை வளாகத்தில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் வெண்கல சிலைகளை திறந்து வைப்பார். பின்னர் நேதாஜி மைதானத்தில் நடைபெறும் நலத்திட்ட விழாவில், ரூ.949.53 கோடி மதிப்பில் 61 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, ரூ.182.06 கோடி மதிப்பில் 35 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
மேலும், ரூ.34.80 கோடியில் திருப்பூர் மாநகராட்சி பஸ் நிலையம், ரூ.41 கோடியில் வேலம்பாளையம் அரசு மருத்துவமனையில் 100 படுக்கை வசதியுடன் புதிய கட்டிடம், ரூ.39.44 கோடியில் திருமுருகன்பூண்டி டைடல் பூங்கா ஆகியவற்றை காணொலியின் மூலம் திறந்து வைக்கிறார். ரூ.295.29 கோடி மதிப்பில் 19,785 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.
அதன்பின் காலை 11.30 மணிக்கு உடுமலை தி.மு.க. அலுவலக புதிய கட்டிடத்தை திறந்து வைத்து, மதியம் 12 மணிக்கு பொள்ளாச்சிக்கு புறப்படுகிறார்.
அங்கு பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்டம் அமைய காரணமான காமராஜர், சி. சுப்பிரமணியம், வி. கே. பழனிச்சாமி கவுண்டர், பொள்ளாச்சி மகாலிங்கம் ஆகியோரின் சிலைகளையும், அணை பணியில் உயிரிழந்த தொழிலாளர்களின் நினைவரங்கத்தையும் திறந்து வைக்கிறார். பின்னர் மதியம் 2 மணிக்கு கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு திரும்புகிறார்.