நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் வரல தம்பி... திமுக அமைச்சருக்கு பாஜக நயினார் பதிலடி!
BJP Naiyinar Reply to DMK Minister TRB Raja
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "நேற்று முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் குறித்து நான் எழுப்பிய கேள்விகளில் ஒரு சிறிய பாகத்திற்கு மட்டும் திசைத்திருப்பும் விதமாக பதிலளித்துவிட்டு, முக்கிய கேள்விகளுக்கு மௌனத்தை மட்டுமே பதிலாகத் தந்துள்ளார் மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் தம்பி திரு. TRB ராஜா அவர்கள்.
தமிழக மக்களுக்கு உண்மையைத் தெரியப்படுத்துவதற்காக, முதல்வர் அவர்களையும், தொழில்துறை அமைச்சர் அவர்களையும் நோக்கி மீண்டுமொரு முறை எனது கேள்விகளைக் கேட்கிறேன்.
1. நான் நேற்று மூன்று நிறுவனங்களைப் பற்றி குறிப்பிட்ட நிலையில், அமைச்சர் திரு. TRB ராஜா அவர்களோ, Knorr-Bremse நிறுவனத்தைப் பற்றி மட்டுமே தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், Nordex India Manufacturing Pvt Ltd, Ebmpapst India ஆகிய மற்ற இரு நிறுவனங்களைப் பற்றி ஏன் பதிலளிக்கவில்லை? கடந்த 1996 ஆம் ஆண்டு முதலே Ebmpapst India நிறுவனமும், 18.12.2020 முதலே Nordex India நிறுவனமும் தமிழகத்தில் இயங்கி வருகின்றன என்பதை அமைச்சரால் மறுக்கமுடியுமா? அப்பொழுது யார் பொய் பேசுகிறார்கள்? இப்படிப் பொய் பேசித்தான் தம்பி திரு. TRB ராஜா அவர்கள் தொழில்துறை அமைச்சராகத் தொடர்கிறாரா?
2. வெளிநாடுகளுக்கு அமைச்சர்களை மட்டும் அனுப்பி, ரூ. 7 லட்சம் கோடி முதலீடுகளை மாண்புமிகு உத்தரப்பிரதேச முதல்வர் திரு. யோகி ஆதித்யநாத் அவர்கள் ஈர்த்த நிலையில், ஆறு முறை வெளிநாட்டிற்கு சென்றும் சில ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களை மட்டுமே தமிழக முதல்வர் ஈர்த்துள்ளது ஏன்?
3. அடுத்தது, நமது முதல்வரின் வெளிநாட்டுப் பயணங்களில் போடப்பட்ட ஒப்பந்தங்களில் பெரும் பங்கு வெறும் காகித அளவிலேயே நிற்பது ஏன்? அவற்றால் இதுவரை எவ்வளவு வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன? இதற்கான ஒரு திட்டவட்டமான வெள்ளை அறிக்கையை சமர்ப்பிக்க முதல்வர் ஏன் தயங்குகிறார்?
திமுக அரசின் தவறைச் சுட்டிக்காட்டினாலே தமிழகத்தை இழிவுபடுத்திவிட்டதாக திசைத்திருப்புவதுதான் திராவிட மாடலின் வழக்கம். ஆகவே, திரும்பத் திரும்ப திசைத்திருப்புவதை விட்டு, கடந்த நான்கு ஆண்டுகளில் முதல்வர் மேற்கொண்ட வெளிநாட்டு முதலீட்டுப் பயணங்களைப் பற்றி வெள்ளை அறிக்கையை வெளியிடுங்கள். இந்தப் பயணங்கள் உண்மையிலேயே தமிழகத்திற்கு பயன் அளித்ததா? இல்லையா? என்பதைப் பொதுமக்களே தீர்மானிக்கட்டும்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
BJP Naiyinar Reply to DMK Minister TRB Raja