மயிலாடுதுறை 5 வயது சிறுமி பலி! திமுக அரசு என்ன பதில் சொல்லப் போகிறது? கொந்தளிக்கும் அண்ணாமலை!
BJP Annamalai Condemn to DMK Govt MK Stalin mayiladurai child death
பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "மயிலாடுதுறை மாவட்டம் காளி ஊராட்சியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததாலும், மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் இல்லாததாலும் 5 வயது சிறுமி சஹானாஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. சிறுமியின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நடப்பாண்டு ஆரம்பத்தில், தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் 1,467 மருத்துவர்கள் பணியிடம் நிரப்பப்படாமல் இருப்பதை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பியிருந்தோம். அதன் பின்னர், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மருத்துவர்கள் நியமிக்கப்பட்டதாக திமுக அரசு செய்திகள் வெளியிட்டது.
ஆனால், இன்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர் பற்றாக்குறை காரணமாக மக்கள் இன்னலுக்கு உள்ளாகிறார்கள். உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது.
கொரோனா பெருந்தொற்று காலத்தில், இந்தக் காளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் இருந்ததாகவும், தற்போது ஒரு ஆம்புலன்ஸ் கூட இல்லை என்றும், நிரந்தர மருத்துவர்களும் இல்லை என்றும் குற்றம் சாட்டி காளி ஊராட்சி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மக்களின் அடிப்படை தேவைகளுக்குக் கூட போராட வேண்டிய நிலைமைக்கு தள்ளியுள்ளது இந்த ஊழல் திமுக அரசு. ஆரம்ப சுகாதார நிலையங்களில் நியமிக்கப்பட்டதாக சொன்ன மருத்துவர்கள் எங்கே? இன்றைய தேதியில் தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் எத்தனை காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கிறது என்பதை அரசு வெளிப்படைத் தன்மையோடு வெளியிடவேண்டும்.
அரசின் செயலற்றத் தன்மையால் பறிப்போன உயிர்களுக்கு இந்த திமுக அரசு என்ன பதில் சொல்லப் போகிறது? என்று தெரிவித்துள்ளார்.
English Summary
BJP Annamalai Condemn to DMK Govt MK Stalin mayiladurai child death