தேவையற்ற பேச்சுகளை தவிர்க்க வேண்டும்...! - விஜய்க்கு வைகோ அறிவுரை
Avoid Unnecessary Talk Vaiko Advises Vijay
திருப்பத்தூரில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் பேசியபோது பல்வேறு அரசியல் மற்றும் சமகால விவகாரங்கள் குறித்து தனது கருத்துகளை வெளிப்படுத்தினார்.நாடு முழுவதும் கியாஸ் சிலிண்டர் பற்றாக்குறை நிலவி வருவதாக கூறிய அவர், சில இடங்களில் மயானங்களில் கூட உடல்களை எரிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதற்கு தீர்வாக தமிழக அரசு மயானங்களில் சோலார் மின்சார வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் பரிந்துரைத்தார்.
வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் தாம் ஒருபோதும் போட்டியிட மாட்டேன் என்று தெளிவாக கூறிய வைகோ, தி.மு.க. கூட்டணியில் எந்த தொகுதியில் போட்டியிடுவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.
பாராளுமன்றத்தில் நீண்ட காலம் பணியாற்றி மனநிறைவுடன் செயல்பட்டதாகவும், 1300 முறை பேசும் வாய்ப்பு கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
தூத்துக்குடி மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவத்தை கடுமையாக கண்டித்த அவர், இத்தகைய குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்க புதிய சட்டம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தி.மு.க.வுக்காக தேர்தலில் முழு உற்சாகத்துடன் பிரசாரம் செய்வேன் என்றும், கட்சி கூறும் எந்த தொகுதியிலும் சென்று மக்களை சந்தித்து ஆதரவு திரட்டத் தயாராக உள்ளேன் என்றும் தெரிவித்தார்.நடிகர் விஜய் அரசியலில் புதிதாக களமிறங்கியுள்ள நிலையில் தேவையற்ற கருத்துகளை தவிர்ப்பது நல்லது என்றும் வைகோ தெரிவித்தார்.
அதேபோல், உலக அரசியலில் பதற்றம் அதிகரிக்க காரணம் டொனால்ட் டிரம்ப் என கடுமையாக விமர்சித்த அவர், அவரது பேச்சுகள் சர்ச்சையை ஏற்படுத்துகின்றன என்றும் குற்றம்சாட்டினார்.மேலும், பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தி.மு.க. குறித்து கூறும் கருத்துகளை விமர்சித்த வைகோ, தமிழ்நாட்டில் பா.ஜ.க.க்கு அரசியல் ஆதரவு கிடையாது என்றும் தெரிவித்தார்.
மோடி எவ்வளவு முயன்றாலும் தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பது சாத்தியமில்லை என்றும், மாநில அரசியலில் தி.மு.க. வலுவாக நிலைத்து நிற்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
English Summary
Avoid Unnecessary Talk Vaiko Advises Vijay