கிருஷ்ணகிரி அருகே சோகம்; யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு; சடலத்துடன் கிராமவாசிகள் நள்ளிரவில் மறியல் போராட்டம்..!
Villagers protest with the body after a farmer died after being attacked by an elephant near Krishnagiri
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேப்பனப்பள்ளி அருகே ஆந்திர மாநில எல்லையையொட்டி உள்ள சிகரமானப்பள்ளி, தோட்டகனவாய், கே.கொத்தூர், கீழ் பூங்குருத்தி, மேல் பூங்குருத்தி உள்ளிட்ட கிராமங்களில் கடந்த ஒரு ஆண்டுகளாக ஒற்றை காட்டு யானை சுற்றி வருகிறது.
குறித்த யானை பகலில் வனத்திலும், இரவில் கிராம பகுதிகளுக்குள் நுழைந்து உலா வருகிறது. அத்துடன், விவசாய நிலங்களில் உள்ள பயிர்களை சேதபடுத்துவதோடு, மனித உயிரிழப்புகளுக்கும் காரணமாக உள்ளது.
இந்நிலையில், கீழ் பூங்குருத்தி கிராமத்தை சேர்ந்த 40 வயதான விவசாயி ஆனந்தன் அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலில் பூசாரியாகவும் உள்ளார். நேற்று ஆடிப்பெருக்கை ஓட்டி, கோயிலில் பூஜைகள் முடித்துவிட்டு, வீட்டுகு திரும்பியுள்ளார். அப்போது அவ்வழியே வந்த ஒற்றை யானை, ஆனந்தனை தும்பிக்கையால் தூக்கி வீசி உள்ளது. அப்போது ஆனந்தன் சம்பவ இடத்திலேயே படுகாயங்களுடன் உயிரிழந்துள்ளார்.

முன்னதாக கறவை மாடு ஒன்றையும் குறித்த யானை தாக்கி கொன்றுள்ளது. இதில், அச்சமடைந்த அப்பகுதி மக்கள் நள்ளிரவில் ஆனந்தன் சடலத்துடன், கிருஷ்ணகிரி - குப்பம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இற்றது குறித்து தகவலறிந்து வந்த கிருஷ்ணகிரி வனத்துறையினர், வட்டாட்சியர் ராஜலட்சுமி மற்றும் மகாராஜாகடை போலீஸார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்..
அப்போது கிராம மக்கள் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக யானைகளால் விவசாயிகள், கிராம மக்கள் அச்சத்துடன் இருக்க வேண்டிய நிலை உள்ளதாகவும், ஒற்றை யானை தாக்கியதில் இதுவரை 05 விவசாயிகள் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன், விவசாயிகளுக்கு பாதுகாப்பு வேண்டும் எனவும், யானை தாக்கி உயிரிழந்த ஆனந்தன் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டை தாமதமின்றி உடனே வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் இந்த ஒற்றை யானையை வனப்பகுதிக்கு விரட்டி மின்வேலி அமைக்கும் பணியை தொடங்க வேண்டும் என்றும், வனத்துறையினர் இரவு நேரங்களில் யானைகள் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
அப்போது யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் தீர்வு காணப்படும் என அலுவலர்கள் கிராம வாசிகளிடம் கூறியுளளனர். இதனை ஏற்று மறியலை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றுள்ளனர். பின்னர்போலீஸார், ஆனந்தனின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
English Summary
Villagers protest with the body after a farmer died after being attacked by an elephant near Krishnagiri