'சட்டமன்றத்திற்குள் நுழைய விடாமல் தடுக்கவே இந்தச் சதி'...! - உதயநிதி ஸ்டாலின் கைதால் கொந்தளித்த கனிமொழி...!
This conspiracy prevent him from entering legislature Kanimozhi angered by Udhayanidhi Stalin arrest
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட சம்பவத்துக்கு தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், நாளை தொடங்கவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் பங்கேற்பதைத் தடுக்கும் நோக்கத்திலேயே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் கனிமொழி தெரிவித்திருப்பதாவது,"அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் மீது தனிப்பட்ட குற்றச்சாட்டு அல்லது பழிவாங்கும் எண்ணம் இருந்தால், சட்டப்படி வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் எடுத்துச் செல்லலாம். அந்த வழக்கில் நீதித்துறை உரிய விசாரணை நடத்தி சட்டத்தின்படி தீர்ப்பு வழங்கட்டும்.
ஆனால், ஜனநாயக நடைமுறைகளை புறக்கணித்து கைது நடவடிக்கையை முதன்மையான ஆயுதமாக பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாத செயல்.அரசியல் ரீதியாக தி.மு.க.வை எதிர்கொள்ள முடியாத நிலையில்தான், இதுபோன்ற அடக்குமுறை நடவடிக்கைகளை அரசு கையாள்கிறது.
கருத்துகளுக்கு கருத்துகளால் பதிலளிக்க முடியாமல், அதிகார பலத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சியின் குரலை ஒடுக்க முயற்சிப்பது ஜனநாயகத்திற்கு எதிரான அணுகுமுறையாகும்.நாளை தொடங்கவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் தனது கருத்துகளை முன்வைப்பதை தடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன்தான் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது அரசின் அச்ச மனப்பான்மையையும், அரசியல் ரீதியான பலவீனத்தையும், எதிர்க்கட்சியை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கை இல்லாத நிலையையும் வெளிப்படுத்துகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தி.மு.க.வினர் பல்வேறு இடங்களில் தொடர் கண்டனப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் கட்சித் தொண்டர்கள் சாலை மறியல், ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டன முழக்கங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது.
குறிப்பாக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நேரத்தில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பது தமிழக அரசியலில் புதிய விவாதத்தையும், கடும் அரசியல் மோதலையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
This conspiracy prevent him from entering legislature Kanimozhi angered by Udhayanidhi Stalin arrest