ஆணவப் பேச்சுக்கு அரசியல் சாம்பல் தான் மிஞ்சும்...! - உதயநிதியை சாடி அமைச்சர் ரமேஷ் ஆவேசப் பதிவு...!
Only political ashes remain after arrogant speeches Minister Ramesh furious post criticizing Udhayanidhi
தஞ்சையில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரை தமிழக அரசியல் அரங்கில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, முதல்-அமைச்சர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து அவர் தெரிவித்த கருத்துகள் சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் கடும் விவாதத்தை கிளப்பியுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மீது பல்வேறு தரப்பினரால் புகார்கள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது பேச்சைக் கண்டித்து த.வெ.க. சார்பில் மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அமைச்சர்களும் தொடர்ந்து கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில், தமிழக அமைச்சர் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைதள பதிவு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.அதில், "பேரறிஞர் அண்ணா உருவாக்கிய இயக்கத்தின் உயிர்மூச்சாக விளங்கும் 'கடமை, கண்ணியம், கட்டுப்பாடு' என்ற உயரிய கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரான வகையில், பெண்களின் கண்ணியத்தை காயப்படுத்தும் தரம் தாழ்ந்த கருத்துகளை பொதுமேடையில் முன்வைப்பது மிகவும் கண்டிக்கத்தக்க செயல்.
அரசியல் மேடைகள் தனிநபர்களை இழிவுபடுத்துவதற்கோ, பெண்களை அவமதிப்பதற்கோ பயன்படுத்தப்படக் கூடாது" என்று தெரிவித்துள்ளார்.மேலும், தனது பதிவில், "உங்களின் ஆபாச கற்பனைகளை சமூக வலைதளங்களோடு மட்டுமே வைத்துக்கொள்வது நல்லது. பெண்களை இழிவாக சித்தரித்து பேசும் ஒவ்வொரு வார்த்தையும் சமூகத்தின் ஒட்டுமொத்த மனநிலையையே புண்படுத்துகிறது.
தமிழக பெண்களின் சுயமரியாதையை யாரேனும் கொச்சைப்படுத்த முயன்றால், அதற்கு மக்கள் ஜனநாயக ரீதியில் தக்க பதிலளிப்பார்கள்" என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.தொடர்ந்து, "பெண்களை அவமதிக்கும் எந்தவொரு கருத்தும் நாகரிகமான சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது. குறிப்பாக பொதுவாழ்வில் உள்ள அரசியல் தலைவர்கள், மக்கள் முன் பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் பொறுப்புணர்வு, கண்ணியம் மற்றும் சமூக மரியாதையை கடைபிடிக்க வேண்டும்.
கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் பெண்களின் மாண்பை களங்கப்படுத்தும் பேச்சுகளுக்கு எந்தவித நியாயமும் இல்லை" என்றும் அமைச்சர் ரமேஷ் வலியுறுத்தியுள்ளார்.அமைச்சரின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு, அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Only political ashes remain after arrogant speeches Minister Ramesh furious post criticizing Udhayanidhi