'100% தூய்மைனு சொல்லி ஏமாற்ற முடியாது'...! - டாபர் நிறுவனத்தின் விளம்பரங்களுக்கு FSSAI அதிரடித் தடை...!
You cant be fooled by saying it 100 percentage pure FSSAI bans Dabur advertisements
தேன், நெய், சமையல் எண்ணெய், வினிகர் உள்ளிட்ட உணவுப் பொருட்களை "100 சதவீதம் தூய்மையானது", "100 சதவீதம் இயற்கையானது", "100 சதவீதம் ஆர்கானிக்" என்று விளம்பரப்படுத்தி வந்த டாபர் நிறுவனத்துக்கு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்த வாசகங்களை பயன்படுத்தி விளம்பரம் செய்வதற்கும், தயாரிப்பு லேபிள்களில் இடம்பெறச் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.டாபர் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் தயாரிப்புகளின் பொதிகளில் "100% Natural", "100% Organic", "100% Purity Guaranteed" என்பதற்கு இணையான வாசகங்களை நீண்ட காலமாக பயன்படுத்தி வந்தது.

ஆனால், இத்தகைய முழுமையான உத்தரவாத வார்த்தைகள் நுகர்வோரை தவறாக வழிநடத்தக்கூடியவை என்றும், உணவு லேபிள் விதிமுறைகளுக்கு முரணானவை என்றும் FSSAI தெரிவித்துள்ளது.உணவுப் பொருட்கள் தொடர்பாக "100 சதவீதம் தூய்மை" அல்லது "100 சதவீதம் இயற்கை" என்று அறிவியல் அடிப்படையில் முழுமையான உறுதியுடன் கூற முடியாது என்பதால், இத்தகைய விளம்பரங்கள் நுகர்வோரிடம் தவறான நம்பிக்கையை ஏற்படுத்தும் என்று FSSAI விளக்கியுள்ளது.
மேலும், டாபர் நிறுவனத்தின் ஆர்கானிக் தேன் மற்றும் ஆப்பிள் சீடர் வினிகர் தயாரிப்புகளில், அதற்கான உரிய அனுமதி பெறாமல் 'ஜெவிக் பாரத்' (Jaivik Bharat) ஆர்கானிக் தரச்சான்று முத்திரை பயன்படுத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.இதுபோன்ற "100%" என்ற முழுமையான உத்தரவாத வார்த்தைகளை உணவுப் பொருட்களின் விளம்பரங்களில் பயன்படுத்தக் கூடாது என்று கடந்த 2020-ஆம் ஆண்டிலேயே அனைத்து உணவு உற்பத்தி நிறுவனங்களுக்கும் FSSAI தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கியிருந்தது.
அதனைத் தொடர்ந்து டாபர் நிறுவனத்துக்கும் தனிப்பட்ட முறையில் விளக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும், அதன்பிறகும் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படாததால் தற்போது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.டாபர் நிறுவனத்தின் தேன், நெய், எண்ணெய் அல்லது வினிகர் போன்ற தயாரிப்புகள் தரமற்றவை அல்லது உடல்நலத்திற்கு ஆபத்தானவை என்று FSSAI எந்தவித குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை.
இந்த நடவடிக்கை முழுமையாக தயாரிப்புகளின் லேபிளிங் நடைமுறை, விளம்பர வாசகங்கள் மற்றும் நுகர்வோரை தவறாக வழிநடத்தக்கூடிய சந்தைப்படுத்தல் முறைகள் தொடர்பாக மட்டுமே எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய விளம்பர வாசகங்களுடன் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் தயாரிப்புகளை உடனடியாக திருத்தி, விதிமுறைகளுக்கு ஏற்ப மாற்றம் செய்ய வேண்டும் என்றும், மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை 15 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் FSSAI உத்தரவிட்டுள்ளது.
இந்த நோட்டீஸ் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றும் டாபர் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
English Summary
You cant be fooled by saying it 100 percentage pure FSSAI bans Dabur advertisements