சென்னையில் அமைதி பேரணி நடத்திய ஆர்எஸ்எஸ் அமைப்பினர் கைது,: அண்ணாமலை கண்டனம்..!
Annamalai condemns the arrest of RSS members who held a peaceful rally in Chennai
ஆர்எஸ்எஸ் என்ற ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது. நேற்று டெல்லியில் நடந்த விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமை விருந்தினராக பங்கேற்றதோடு, ஆர்எஸ்எஸ் அமைப்பு நாட்டிற்கு அளித்த பங்களிப்பை எடுத்துக்காட்டும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சிறப்பு அஞ்சல் தலை மற்றும் நினைவு நாணயத்தை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், இன்று சென்னை போரூரில் அமைதி தமிழக ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அமைதி வழியில் பேரணி நடத்தினர்.
இவ்வாறு அமைதியான முறையில், பேரணி நடத்தியவர்களை திமுக அரசின் காவல்துறை கைது செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
'சென்னை போரூரில் அமைதி வழியில் பேரணி நடத்திய ஆர்எஸ்எஸ் அமைப்பினரை திமுக அரசின் காவல்துறை கைது செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை செய்யும் குற்றவாளிகளும், முதியோர்களை கொலை செய்யும் கொலையாளிகளும் சுதந்திரமாக சுற்றிக்கொண்டிருப்பதை கண்டுகொள்ளாத திமுக அரசு, தங்கள் அமைப்பின் 100வது ஆண்டு நிறைவை குறிக்கும் விதமாக அமைதி பேரணி சென்ற ஆர்எஸ்எஸ் அமைப்பினரை கைது செய்திருப்பது காழ்ப்புணர்ச்சியே அன்றி வேறென்ன?
இதுமட்டுமன்றி, கடந்த ஆண்டும் இதே போல ஆர்எஸ்எஸ் அமைப்பின் பேரணிக்கு தடை விதிக்க எல்லா வழியிலும் முயற்சித்த திமுக அரசுக்கு குட்டு வைத்த மாண்புமிகு உயர்நீதிமன்றம், வருங்காலத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பேரணிக்கு அனுமதி மறுக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டது. அதையும் மீறி காவல்துறை கைது செய்திருப்பது நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் செயலாகவே உள்ளது.
இனியும் இதுபோன்ற, சிறுபிள்ளைத்தனமான அரசியல் விளையாட்டுகளை திமுக அரசும், காவல்துறையும் தவிர்க்க வேண்டும் என்றும், கைது செய்யப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பினரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.' என்று கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
English Summary
Annamalai condemns the arrest of RSS members who held a peaceful rally in Chennai