மதுரையில் காந்தி சிலைக்கு காவி உடை: 'அருகதை அற்றக் கூட்டம் நடத்திய செயல்' என பாஜகவை விமர்சித்துள்ள வைகோ..! - Seithipunal
Seithipunal


தேச தந்தை மகாத்மா காந்தியின் பிறந்தநாள் தினமான இன்று நாடு முழுவதும் காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் உள்ள காந்தியடிகள் சிலைக்கு,  இன்று பாஜகவினர் காவி ஆடை அணிவித்துள்ளமைக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

'தென் இந்தியா முழுமைக்குமாக 1959-ம் ஆண்டு தொடங்கப்பட்ட மதுரை காந்தி அருங்காட்சியகம், மறைந்த முன்னாள் பிரதமர் நேரு அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது என்ற பெருமை கொண்டது. 1921-ம் ஆண்டு செப்டம்பர் 21-ம் தேதி ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்த காந்தியடிகள், மதுரை மேலமாசி வீதியில்

தங்கியிருந்தார். அப்போது மதுரையில் ஏழை, எளிய மக்களும், விவசாயிகளும் மேலாடை அணியக் கூட வசதி இல்லாமல் வறுமையில் இருந்ததைக் கண்டு மனம் வருந்தினார்.

அப்போதுதான் “தன் நாட்டு மக்களின் அன்றைய நிலையைக் கண்டு நாடு முழுமைக்கும் என்றைக்குத் தம் மக்கள் மேலாடை அணியும் நிலை வருமோ அன்று வரை தானும் மேலாடை அணிவதில்லை” என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க உறுதிமொழியை செப்டம்பர் 22-ல் எடுத்தார். இந்த நிகழ்வு அண்ணல் காந்தியடிகளின் ஆடைப்புரட்சி என்று குறிப்பிடப்படுகின்றது. அதன்பிறகு வாழ்நாள் முழுவதும் எளிய கதர் ஆடைகளைத்தான் காந்தி அணிந்தார்.

மேலும் காந்தியை கோட்சே சுட்டபோது காந்தியடிகள் தன் உடலில் அணிந்திருந்த ஆடையானது மதுரை காந்தி அருங்காட்சியகத்திற்குத்தான் கொண்டு வரப்பட்டது. ரத்தக் கறை படிந்த காந்தியடிகளின் இறுதி உடை ஏன் மதுரைக்குக் கொண்டு வரப்பட்டது? என்பதற்கான காரணமும், மதுரைக்குப் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.

இத்தகைய சிறப்புமிக்க மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் உள்ள காந்தியடிகள் சிலைக்கு, அவரது பிறந்த நாளான இன்று பாஜகவினர் காவி ஆடை அணிவித்து உள்ளனர்.

காந்தியாரை சுட்டுக்கொன்ற நாதுராம் விநாயக கோட்சே ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் பயிற்சி பெற்றவர் என்பதும், மதவாதக் கூட்டம் காந்தியின் கொலைக்கு திட்டம் வகுத்துக் கொடுத்ததும் வரலாற்றில் ரத்த அத்தியாயங்களாக எழுதப்பட்டிருக்கின்றன.

காந்தியார் எந்த மத நல்லிணக்கத்திற்காக உயிரையே தியாகம் செய்தாரோ அந்த மகாத்மா காந்தியின் சிலையை தொடுவதற்கே அருகதை அற்றக் கூட்டம் துரையில் அவரது சிலைக்கு காவி ஆடை அணிவித்து இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.' என்று கடுமையாக கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vaiko criticizes BJP for dressing Gandhi statue in saffron in Madurai


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->