‘மாரி 2’க்கு பிறகு மீண்டும் இணையும் தனுஷ் – சாய் பல்லவி ஜோடி: டி55 படத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Dhanush and Sai Pallavi to reunite after Maari 2 Official announcement on D55
‘மாரி 2’ திரைப்படத்திற்கு பிறகு நடிகர் தனுஷ் மற்றும் நடிகை சாய் பல்லவி மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளனர். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோலிவுட்டில் மிகப் பிஸியான நடிகர்களில் ஒருவராக இருக்கும் தனுஷ், இந்த ஆண்டில் மட்டும் அரை டஜன் படங்களுக்கு மேல் நடித்து வருகிறார். அந்த வரிசையில் முக்கியமான படமாக உருவாகி வரும் படம் தான் ‘டி55’. இந்த படத்தை ‘அமரன்’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். ‘அமரன்’ போன்று, ‘டி55’ படமும் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
‘டி55’ திரைப்படத்தை தனுஷின் சொந்த தயாரிப்பு நிறுவனமான வொண்டர் பார் ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. கடந்த சில நாட்களாக இப்படம் குறித்த அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. முதலில், இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளார் என அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, நடிகை ஸ்ரீலீலா கதாநாயகியாக நடிக்க உள்ளார் என படக்குழு உறுதிப்படுத்தியது.
இந்த நிலையில், ‘டி55’ படத்தில் நடிக்கும் மற்றொரு முக்கிய கதாநாயகி குறித்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகை சாய் பல்லவி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ‘அமரன்’ படத்தின் வெற்றிக்கு பிறகு, மீண்டும் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சாய் பல்லவி நடிப்பது குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ‘டி55’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
மேலும், நடிகர் தனுஷ் மற்றும் சாய் பல்லவி சுமார் எட்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடிக்க இருப்பதும் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவர்கள் இருவரும் கடைசியாக ‘மாரி 2’ திரைப்படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். அந்த படத்தில் இடம்பெற்ற ‘ரவுடி பேபி’ பாடல், யூடியூபில் அதிக பார்வைகள் பெற்ற தமிழ் பாடலாக சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றிகரமான கூட்டணி மீண்டும் திரையில் இணைவதால், ‘டி55’ படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
English Summary
Dhanush and Sai Pallavi to reunite after Maari 2 Official announcement on D55