“எங்களுக்கு சோறு போட்ட தாய்”.. விஜயகாந்த் நினைவிடத்தில் கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர்!
The mother who fed us MS Bhaskar gets emotional at Vijayakanth memorial
மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் 74வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அவரது நினைவிடத்தில் திரையுலகினர், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் நேரில் சென்று மரியாதை செலுத்தி வருகின்றனர். முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் விஜயகாந்தை நினைவுகூர்ந்து கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர்.
இந்த நிலையில், நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜயகாந்துடனான தனது நினைவுகளை உருக்கமாக பகிர்ந்துகொண்டார்.
அப்போது பேசிய எம்.எஸ்.பாஸ்கர், “விஜயகாந்த் எங்களுடைய அண்ணன். எனக்கு சோறு போட்டு வளர்த்த தாய். அவர் நம்மை விட்டுப் பிரிந்தாலும், அவருடைய நினைவுகள் நம்மை விட்டு பிரியாது” என்று உணர்ச்சிவசப்பட்டார்.
மேலும், விஜயகாந்தின் பிறந்தநாளையொட்டி ஏராளமானோர் அவரது நினைவிடத்திற்கு வந்திருப்பதை குறிப்பிட்ட அவர், “எல்லோரும் நன்றாக சாப்பிட வேண்டும் என்று நினைத்தவர் விஜயகாந்த். அவர் மறைந்த பிறகும் அவரது நினைவிடத்தில் அன்னதானம் நடைபெற்று வருகிறது. உடலால் பிரிந்தாலும் மனதால் அவர் நம்மை விட்டு பிரியவில்லை” என்றார்.
தொடர்ந்து தனது தனிப்பட்ட வாழ்க்கையில் விஜயகாந்த் செய்த உதவியை நினைவுகூர்ந்த எம்.எஸ்.பாஸ்கர், “நானும் எனது குடும்பமும் இன்று மூன்று வேளை நன்றாக சாப்பிடுகிறோம் என்றால் அதற்கு விஜயகாந்த்தான் காரணம்” என்று கூறினார்.
நடிகராக மட்டுமின்றி சக கலைஞர்களுக்கு உதவும் குணம் கொண்டவராகவும் அறியப்பட்ட விஜயகாந்தின் நினைவுகளை பலரும் இன்றளவும் உருக்கத்துடன் பகிர்ந்து வரும் நிலையில், எம்.எஸ்.பாஸ்கரின் இந்த பேச்சும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
English Summary
The mother who fed us MS Bhaskar gets emotional at Vijayakanth memorial