தேர்தல் தோல்விக்கு தவெகதான் காரணமா? நாம் தமிழர் கட்சிக்குள் வெடிக்கும் அதிருப்தி.. சீமானுக்கு நெருக்கடி!
Is TVK the reason for the election defeat Dissatisfaction erupts within the Naam Tamilar Katchi Seeman faces a crisis
2026 தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நாம் தமிழர் கட்சிக்குள் உட்கட்சிப் பூசலும், நிர்வாகக் குழப்பங்களும் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தல் தோல்விக்கான காரணங்களை கட்சியின் உள்கட்டமைப்பில் தேடாமல், தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் வருகையை சீமான் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருவது மூத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
நாம் தமிழர் கட்சியில் இளைஞர் பாசறை, மகளிர் பாசறை, சுற்றுச்சூழல் பாசறை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட துணை அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. கட்சி அமைப்பு ரீதியாக பெரிய அளவில் வளர்ந்திருப்பது போன்ற தோற்றம் இருந்தாலும், களத்தில் நிர்வாகமும் ஒருங்கிணைப்பும் போதிய அளவில் இல்லை என கட்சியினரே கூறுவதாக தெரிகிறது.
ஒவ்வொரு பாசறைக்கும் பல தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், யாருக்கு என்ன பொறுப்பு, யாருக்கு என்ன அதிகாரம் என்பது தெளிவாக வரையறுக்கப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. இதனால் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் பல துணை அமைப்புகளும் திசை தெரியாமல் செயல்படுவதாக மூத்த நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல், பொதுச்செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள், கொள்கை பரப்புச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகள் இருந்தாலும், அவற்றில் இருப்பவர்களுக்கு போதிய முடிவெடுக்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. முக்கிய முடிவுகள் குறிப்பிட்ட சிலரால் மட்டுமே எடுக்கப்படுவதால், கீழ்மட்ட தொண்டர்களுடனான தொடர்பும் குறைந்துவிட்டதாக நிர்வாகிகள் கருதுகின்றனர்.
குறிப்பாக தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் வாக்குச்சாவடி அளவில் வலுவான கட்டமைப்பை உருவாக்குவதிலும் கட்சி பின்தங்கிவிட்டதாக விமர்சனம் எழுந்துள்ளது. தொகுதி வாரியாக உள்ளூர் பிரச்சினைகளை கையில் எடுத்து தொடர்ந்து களப்பணியில் ஈடுபடுவதற்குப் பதிலாக, மேடைப் பேச்சுகள் மற்றும் சமூக வலைதளப் பிரசாரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாக சில நிர்வாகிகள் கருதுவதாக தெரிகிறது.
இந்த உள்கட்டமைப்பு குறைபாடுகளே தேர்தல் பின்னடைவுக்கு முக்கிய காரணம் என கட்சிக்குள் ஒரு தரப்பினர் சுட்டிக்காட்டி வருகின்றனர். ஆனால், தேர்தல் தோல்விக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் வருகையே முக்கிய காரணம் என சீமான் தொடர்ந்து கூறி வருவது அவர்களிடையே சலிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
“முதலில் வீட்டில் இருக்கும் பிரச்சினையை சரி செய்ய வேண்டும்; மற்ற கட்சிகள் மீது பழி போடுவதால் மட்டும் தேர்தல் வெற்றியை பெற்றுவிட முடியாது” என்பதே அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளின் கருத்தாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
தேர்தல் தோல்விக்குப் பிறகு சீமான் வழக்கமான செய்தியாளர் சந்திப்புகளை தவிர்த்து, கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. தற்போதைய அரசியல் சூழலில் பழைய பாணியிலேயே பயணிக்காமல், கட்சியின் நிர்வாக கட்டமைப்பை முழுமையாக மாற்றியமைக்க வேண்டும் என்ற குரலும் நாதகவுக்குள் வலுத்து வருவதாக தெரிகிறது.
குறிப்பாக பூத் கமிட்டிகளை வலுப்படுத்துவது, அடிமட்ட நிர்வாகிகளைச் செயல்படுத்துவது, தொகுதி வாரியாக உள்ளூர் பிரச்சினைகளை கையில் எடுப்பது, துணை அமைப்புகளுக்கு தெளிவான அதிகார வரம்பை நிர்ணயிப்பது ஆகியவை அடுத்தகட்டத்தில் முக்கியத்துவம் பெற வேண்டும் என கட்சிக்குள் வலியுறுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, தேர்தல் முடிவால் ஏற்பட்ட அதிருப்தியுடன் சீமான் கோபத்திலும் இருப்பதாக கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது. இனி யாருக்காக அரசியல் செய்ய வேண்டும் என்ற கேள்வியும் அவருக்குள் எழுந்துள்ளதாக கூறப்படும் நிலையில், கட்சியை மறுசீரமைக்கும் நடவடிக்கைகளில் அவர் கவனம் செலுத்துவாரா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
மேடைப் பேச்சுகள், உணர்ச்சிமிகு முழக்கங்கள் மற்றும் இணையப் பிரசாரம் மட்டும் தேர்தல் வெற்றிக்கு போதாது என்பதை இந்த தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ளதாக நாதகவின் ஒரு தரப்பினர் கருதுகின்றனர். எனவே, நாம் தமிழர் கட்சி இந்த உள்கட்சி அதிருப்தியை சமாளித்து மீண்டும் வலுவான கள அமைப்பை உருவாக்குமா, அல்லது தேக்க நிலையை நோக்கி செல்லுமா என்பதே சீமானின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளில் தீர்மானிக்கப்பட உள்ளது.
English Summary
Is TVK the reason for the election defeat Dissatisfaction erupts within the Naam Tamilar Katchi Seeman faces a crisis