“நல்ல வேளை நீங்கள் நடிக்கவில்லை!” கியாரா அத்வானியிடம் விக்னேஷ் சிவன் சொன்ன வார்த்தை.. அரங்கையே சிரிக்க வைத்த சம்பவம்!
Thank goodness you didnot act what Vignesh Shivan said to Kiara Advani
இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், க்ரீத்தி ஷெட்டி, சீமான் உள்ளிட்டோர் நடித்த ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்த சூழலில், சென்னையில் நடைபெற்ற ‘டாக்சிக்’ திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் விக்னேஷ் சிவன் பேசிய ஒரு விஷயம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கன்னட நடிகர் யாஷ் கதாநாயகனாக நடித்துள்ள ‘டாக்சிக்’ திரைப்படத்தை கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளார். இதில் கியாரா அத்வானி, நயன்தாரா, ருக்மிணி வசந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கியாரா அத்வானி இந்தப் படத்தின் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமாகிறார்.
படத்தின் புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் கியாரா அத்வானி கலந்துகொண்டார். நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால், அவரது கணவரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன் சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அப்போது மேடையில் பேசிய விக்னேஷ் சிவன், கியாரா அத்வானியை ஏற்கனவே சந்தித்த நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.
“கியாரா அத்வானி எனக்கு நன்றாக நினைவிருக்கிறார். ‘கபீர் சிங்’ படத்துக்கு முன்பு ஒரு கதையை சொல்வதற்காக உங்களை வந்து சந்தித்தேன். அந்தப் படத்தை இப்போது நான் எடுத்துவிட்டேன். படத்தின் பெயர் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’. நல்ல வேளை, அதிர்ஷ்டவசமாக நீங்கள் அதில் நடிக்கவில்லை” என்று விக்னேஷ் சிவன் கூறினார்.
விக்னேஷ் சிவனின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும் கியாரா அத்வானி சிரித்தார். அவருடன் அரங்கில் இருந்தவர்களும் சிரித்ததால் நிகழ்ச்சியே கலகலப்பானது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
கியாரா அத்வானி பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். ‘எம்.எஸ். தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற அவர், தொடர்ந்து பல முன்னணி படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் நடித்துள்ள அவர், இதுவரை நேரடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகவில்லை.
இந்நிலையில், யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாக்சிக்’ படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களிடம் மீண்டும் கவனம் பெற்றுள்ளார். குறிப்பாக, ‘கே.ஜி.எஃப்’ படத்துக்குப் பிறகு யாஷ் நடிக்கும் படம் என்பதால் ‘டாக்சிக்’ மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இதற்கிடையே, விக்னேஷ் சிவன் இயக்கிய ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தின் தோல்வியும் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. படம் வெளியான பின்னர், எதிர்பார்த்த அளவுக்கு சில விஷயங்கள் ரசிகர்களிடம் சென்றடையவில்லை என விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளப் பதிவில் வருத்தம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தான் இயக்கிய படத்தில் கியாரா நடிக்காததைப் பற்றி விக்னேஷ் சிவனே மேடையில் காமெடியாக குறிப்பிட்ட சம்பவம், தற்போது ‘டாக்சிக்’ புரமோஷனில் பேசுபொருளாக மாறியுள்ளது.
English Summary
Thank goodness you didnot act what Vignesh Shivan said to Kiara Advani