கார்த்தியின் ‘சர்தார் 2’ சிங்கிள்! கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்!
Karthi Sardar 2 single Blue Sattai Maran takes a dig
நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘வா வாத்தியார்’ திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் தோல்வியை சந்தித்த நிலையில், அவரது அடுத்த படமான ‘சர்தார் 2’ மீது ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது. பி.எஸ்.மித்ரன் இயக்கும் இப்படம் வரும் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கார்த்தி தனது முதல் படமான ‘பருத்தி வீரன்’ தொடங்கி வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். இடையில் சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும், தொடர்ந்து புதிய கதைக்களங்களில் கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக ‘மெய்யழகன்’ திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றபோதும், வசூல் ரீதியாக பெரிய வெற்றியை பெறவில்லை. அதனைத் தொடர்ந்து வெளியான ‘வா வாத்தியார்’ படமும் ரசிகர்களிடம் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
இந்நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான ‘சர்தார்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பி.எஸ்.மித்ரன் இயக்கிய அந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து தற்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.
‘சர்தார் 2’ படத்தில் கார்த்தியுடன் எஸ்.ஜே.சூர்யா, ரஜிஷா விஜயன், மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் சிங்கிளான ‘மயில் வீரா’ பாடல் நேற்று வெளியானது.
பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது வழக்கமான பாணியில் பாடலை கலாய்த்து பதிவிட்டுள்ளார்.
அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “முருகன்: ஏன்டா.. கொஞ்சநாளா எல்லா பயலும் என்னை வச்சி வியாபாரம் பண்றீங்க? ராமரை மறந்துட்டீங்களா?” என்று பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் சமீபகாலமாக முருகனை மையப்படுத்திய தலைப்புகள் மற்றும் கதைகள் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டும் வகையிலேயே ப்ளூ சட்டை மாறனின் இந்தப் பதிவு அமைந்துள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘சேயோன்’ திரைப்படத்தின் தலைப்பும் முருகனை குறிக்கும் பெயராக இருப்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்துக்கும் ‘தமிழ் முருகன்’ என பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், ‘சர்தார் 2’ முதல் சிங்கிளை முன்வைத்து ப்ளூ சட்டை மாறன் போட்டுள்ள இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
English Summary
Karthi Sardar 2 single Blue Sattai Maran takes a dig