நெய்வேலியில் பரபரப்பு...! காவலர்களுக்கு அரிவாள் வெட்டு…! - தப்பியோடிய ரவுடி மீது துப்பாக்கிச் சூடு...! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம் நெய்வேலி இந்திரா நகரைச் சேர்ந்த ரவுடி ஆனந்தராஜ் (36) என்பவருக்கும், கீழ்வடக்குத்து கிழக்குத் தெருவைச் சேர்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ரவுடி கோபி (31) என்பவருக்கும் இடையே நீண்டகாலமாக முன்விரோதம் இருந்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. கோபி மீது ஏற்கெனவே 2 கொலை வழக்குகள், 7 கொலை முயற்சி வழக்குகள் உள்பட 29 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 16-ம் தேதி கோபி தனது கூட்டாளிகள் 16 பேருடன் சென்று ஆனந்தராஜ் மற்றும் அவருடன் இருந்தவர்களை கத்தியால் சரமாரியாகத் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த தாக்குதலில் இந்திரா நகரைச் சேர்ந்த நரேஷ்குமார் (26) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த ஆனந்தராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற பின்னர் வீடு திரும்பினார்.

நரேஷ்குமாரின் தாயார் அம்மு (47) அளித்த புகாரின் அடிப்படையில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் 16 பேரில் 14 பேரை காவலர்கள் கைது செய்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்ட ரவுடி கோபி மட்டும் தலைமறைவாக இருந்ததால், அவரை பிடிக்க தனிப்படை காவலர்கள் பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடி வந்தனர்.இதற்கிடையே, முத்தாண்டிக்குப்பம் பகுதியில் கோபி பதுங்கியிருப்பதாக காவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில், நெய்வேலி நகர் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான தனிப்படை காவலர்கள், முத்தாண்டிக்குப்பம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புலவன்குப்பம் சாலையில் உள்ள ஒதியடிவீரன் கோவில் அருகே விரைந்து சென்றனர்.அங்கு பதுங்கியிருந்த கோபியை காவலர்கள் சுற்றிவளைத்துப் பிடிக்க முயன்றனர்.

அப்போது, அவர் திடீரென அங்கிருந்து தப்பியோட முயன்றதுடன், தன்னிடம் வைத்திருந்த அரிவாளால் காவலர்களை தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த தாக்குதலில் தலைமைக் காவலர் பாண்டியராஜனின் (33) இடது கையிலும், தலைமைக் காவலர் விஜயலாதசோழனின் (36) இடது முழங்கையிலும் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டன.காவலர்களுக்கு ஆபத்து ஏற்பட்ட நிலையில், தாக்குதலைத் தடுத்து தற்காப்பு நடவடிக்கையாக காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தனது கைத்துப்பாக்கியால் கோபியின் வலது முழங்கால் பகுதியில் இரண்டு முறை சுட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த கோபி நிலைதடுமாறி கீழே விழுந்தார். உடனே காவலர்கள் அவரை மடக்கிப் பிடித்து மீட்டனர்.பின்னர் காயமடைந்த கோபியை நெய்வேலி மருத்துவமனைக்கு காவலர்கள் அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக பலத்த காவல் பாதுகாப்புடன் கடலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.இதனிடையே, அரிவாள் தாக்குதலில் காயமடைந்த தலைமைக் காவலர்கள் பாண்டியராஜன் மற்றும் விஜயலாதசோழன் ஆகியோரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ரவுடி கோபி மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அவரை கைது செய்யச் சென்றபோது காவலர்களை அரிவாளால் தாக்கிய சம்பவமும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற துப்பாக்கிச் சூடும் நெய்வேலி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக காவலர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

There commotion Neyveli Cops attacked sickles Shooting fleeing rowdy


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->