டாக்சிக்’ ரிலீஸ் இன்று: தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவிலில் யாஷ் சிறப்பு வழிபாடு...!
Toxic releases today Yash performs special prayers Dharmasthala Manjunathar Temple
உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் யாஷின் ‘டாக்சிக்’ திரைப்படம் இன்று வெளியாகும் நிலையில், படத்தின் வெற்றிக்காக அவர் கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே உள்ள பெல்தங்கடியில் அமைந்துள்ள தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவிலுக்குச் சென்று சிறப்பு வழிபாடு செய்தார்.

‘டாக்சிக்’ திரைப்படத்தின் வெளியீட்டையொட்டி நடிகர் யாஷ் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இதன் ஒரு பகுதியாக, சென்னையில் நடைபெற்ற திரைப்பட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், பின்னர் தனி விமானம் மூலம் மங்களூரு சென்றார். அங்கிருந்து பெல்தங்கடியில் உள்ள தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார்.
படம் வெற்றி பெற வேண்டும் என்ற வேண்டுதலுடன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் யாஷ் பங்கேற்று வழிபட்டார். கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பாரம்பரிய முறைப்படி பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து தர்மஸ்தலா கோவில் தர்மாதிகாரி வீரேந்திர ஹெக்டேவை யாஷ் சந்தித்து கலந்துரையாடினார்.
யாஷ் கோவிலுக்கு வந்த தகவல் ரசிகர்களிடம் பரவியதும், அவரைக் காண ஏராளமானோர் கோவில் முன்பு திரண்டனர். ரசிகர்கள் கூட்டம் அதிகரித்ததால் அப்பகுதியில் பரபரப்பும், கூட்ட நெரிசலும் ஏற்பட்டது.
இதையடுத்து பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் ரசிகர்களைக் கட்டுப்படுத்தி, கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர்.தான் நடிக்கும் திரைப்படங்கள் வெளியாகும் முன்பு தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவிலுக்குச் சென்று வழிபடுவதை யாஷ் தொடர்ந்து கடைப்பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
English Summary
Toxic releases today Yash performs special prayers Dharmasthala Manjunathar Temple