“சினிமா எவன் அப்பன் வீட்டு சொத்தும் இல்லை”.. விஜயகாந்த் செய்த உதவியை நினைவுகூர்ந்த ‘காதல்’ சுகுமார்!
Cinema isnot anyone family inheritance Kadhal Sukumar recalls the help extended by Vijayakanth
மறைந்த நடிகரும் தேமுதிக நிறுவனருமான விஜயகாந்தின் 74வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அவரது ரசிகர்கள், தொண்டர்கள் மற்றும் திரையுலகினர் பலரும் விஜயகாந்த் குறித்த தங்களது நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், ‘காதல்’ படத்தின் மூலம் பிரபலமான நடிகர் சுகுமார் தனது முகநூல் பக்கத்தில் விஜயகாந்த் குறித்து பகிர்ந்துள்ள பதிவு தற்போது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் உச்சத்தில் இருந்த காலகட்டத்திலேயே சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் விஜயகாந்த். பின்னர் தனது புகழை அரசியலிலும் பயன்படுத்தி, கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா போன்ற வலிமையான தலைவர்கள் இருந்த காலத்திலேயே அரசியலில் களமிறங்கினார். 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்தார்.
இந்த நிலையில், விஜயகாந்த் தன்னிடம் காட்டிய அன்பையும், தைரியம் அளித்த சம்பவத்தையும் நடிகர் சுகுமார் தனது பதிவில் விரிவாக நினைவுகூர்ந்துள்ளார்.
அவர் தனது பதிவில், “2001-ல் வடிவேலு அவர்கள் என்னை அழைத்து மிரட்டியபோது, சில பத்திரிகை நிருபர்கள் அழைத்து அதுபற்றி கேட்டார்கள். நான் சினிமாவில் நடிக்க வேண்டும், அதற்கு எந்தத் தடையும் வரக்கூடாது என்று பேச மறுத்துவிட்டேன். உண்மையில் பயந்துவிட்டேன். சென்னையில் யாரையும் தெரியாது. சொந்தக்காரர்களும் இல்லை” என குறிப்பிட்டுள்ளார்.
அப்போது கோதண்டபாணி டப்பிங் ஸ்டுடியோவிற்கு ஒரு படத்திற்காக பேசச் சென்றிருந்தபோது, அங்கிருந்து வெளியே வந்த விஜயகாந்த் தன்னை அழைத்து பேசியதாக சுகுமார் தெரிவித்துள்ளார்.
“தம்பி, எதற்கும் பயப்படாதீங்க. நடிகர் சங்கத்தில் சேர்ந்துட்டீங்களா?” என விஜயகாந்த் கேட்டதாகவும், தான் இல்லை என்று பதிலளித்தபோது, எப்படியாவது நடிகர் சங்கத்தில் உறுப்பினராக சேரும்படி அறிவுறுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், “என்ன பிரச்னைனாலும் சங்கம் உங்களுக்கு துணை நிற்கும். நீங்க மெம்பர் ஆகலைன்னாலும் எங்கிட்ட வாங்க, நான் பார்த்துக்கிறேன். சினிமா எவன் அப்பன் வீட்டு சொத்தும் இல்லை. எல்லாருக்கும் பொதுவானது” என்று விஜயகாந்த் தன்னை ஊக்கப்படுத்தியதாக சுகுமார் குறிப்பிட்டுள்ளார்.
அன்று விஜயகாந்த் தனது தோளில் தட்டிக் கொடுத்து ஊக்கம் அளித்த சம்பவத்தை இன்றளவும் நினைத்துப் பார்ப்பதாகவும், “அவ்வளவு ஊக்கம் கொடுத்த தலைவர் கேப்டன்” என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
அதேபோல், 1998ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஒரு வார இதழுக்கு விஜயகாந்த் அளித்த பேட்டியையும் சுகுமார் நினைவுகூர்ந்துள்ளார். கலைஞர், புரட்சித்தலைவர் போன்ற ஜாம்பவான்கள் அரசியலில் இருந்தபோது, மக்களுக்காக அரசியலுக்கு வருகிறேன் என்று கூறுவதற்கு என்ன தைரியம் என்று கேட்கப்பட்டபோது, “அரசியலிலும் சரி, சினிமாவிலும் சரி, முகம் பிடித்துப் போனால் ஜனங்க ஏத்துக்குவாங்க” என்று விஜயகாந்த் நம்பிக்கையுடன் பதிலளித்ததாக தெரிவித்துள்ளார்.
“அப்படி முகம் பிடிப்பதற்கு அகம் நன்றாக இருக்க வேண்டும் என்று இறுதி வரை வாழ்ந்த மனிதர் கேப்டன் அவர்கள். பிறந்தநாள் வாழ்த்துகள் கேப்டன்” என்று தனது பதிவை சுகுமார் நிறைவு செய்துள்ளார்.
விஜயகாந்தின் பிறந்தநாளில், தன்னுடைய ஆரம்ப கால சினிமா வாழ்க்கையில் அவர் அளித்த தைரியத்தையும் ஆதரவையும் நடிகர் சுகுமார் நினைவுகூர்ந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Cinema isnot anyone family inheritance Kadhal Sukumar recalls the help extended by Vijayakanth