பரந்தூர் விமான நிலைய நிலம் என்ன ஆகும்? வேறு திட்டத்திற்கு பயன்படுத்த முடியுமா? அரசு விளக்கம்! - Seithipunal
Seithipunal


சென்னையின் இரண்டாவது விமான நிலையமாக பரந்தூரில் அமைக்க திட்டமிடப்பட்டிருந்த விமான நிலையத் திட்டத்தை கைவிடுவதாக முதலமைச்சர் விஜய் அரசு அறிவித்துள்ள நிலையில், அதற்காக ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களை என்ன செய்வது என்ற கேள்வி தற்போது அரசியல் களத்தில் முக்கிய விவாதமாக மாறியுள்ளது.

சென்னையில் உள்ள மீனம்பாக்கம் விமான நிலையம் விரைவில் அதன் முழு திறனை எட்டும் என்பதால், எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க கடந்த திமுக அரசு திட்டமிட்டது. ஆனால் விமான நிலையம் அமையவிருந்த பகுதிகளில் உள்ள கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு சூழலியல் அமைப்புகளும் குரல் கொடுத்தன. அப்போது தவெக தலைவராக இருந்த விஜய்யும் பரந்தூர் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது ஆட்சிக்கு வந்துள்ள விஜய் அரசு, பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளது. இதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டால், அதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை வேறு திட்டங்களுக்கு பயன்படுத்த முடியாது என்றும் அவர்கள் கூறி வருகின்றனர்.

சட்டசபையில் இந்த விவகாரம் குறித்து பேசிய திமுக எம்எல்ஏ எ.வ.வேலு, விமான நிலையம் அமைப்பது மத்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்றும், நிலம் கையகப்படுத்தும் பணியை மட்டுமே மாநில அரசு மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார். கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் புதிய விமான நிலையங்கள் உருவாகி பொருளாதார வளர்ச்சி அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு திமுக அரசு இந்தத் திட்டத்தை முன்னெடுத்ததாகவும் அவர் கூறினார். திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், அதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்த முடியாது என்றும் எ.வ.வேலு தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து பேசிய பாமக எம்எல்ஏ கணேஷ்குமார், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்தது அரசின் கொள்கை முடிவு என்றாலும், தமிழகத்திற்கு கூடுதல் விமான நிலையம் அவசியம் என்று வலியுறுத்தினார். ஒரு திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை வேறு பயன்பாட்டுக்கு மாற்ற சட்டத்தில் இடமில்லை என்றும் அவர் கூறினார். மேலும், தமிழகத்தின் எதிர்கால பொருளாதார வளர்ச்சிக்கு புதிய விமான நிலையம் முக்கியமானது என்றும் சுட்டிக்காட்டினார்.

ஆனால் எதிர்க்கட்சிகளின் இந்தக் கருத்துக்கு தமிழக அரசு தரப்பில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா பதிலளித்தார். குறிப்பிட்ட ஒரு திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை வேறு திட்டத்துக்கு பயன்படுத்துவதற்கு சட்டத்தில் இடம் இருப்பதாக அவர் தெரிவித்தார். எனவே பரந்தூர் விமான நிலையத்திற்காக தேர்வு செய்யப்பட்டு கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் மாற்றுத் திட்டத்துக்கு பயன்படுத்தப்படும் என்றும் அமைச்சர் விளக்கம் அளித்தார்.

இதனால் பரந்தூர் விவகாரம் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்ட நிலையில், கையகப்படுத்தப்பட்ட நிலம் எந்தத் திட்டத்துக்கு பயன்படுத்தப்படும், அந்தத் திட்டம் எப்போது அறிவிக்கப்படும், நிலம் வழங்கிய மக்களுக்கு அரசு எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதே அடுத்தகட்ட எதிர்பார்ப்பாக உள்ளது. அதேபோல், சென்னையின் எதிர்கால விமானப் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்ய விஜய் அரசு முன்வைக்கப் போகும் மாற்றுத் திட்டம் என்ன என்பதும் அரசியல் வட்டாரத்தில் முக்கிய கேள்வியாக மாறியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

What will happen to the land earmarked for the Parandur airport Can it be used for a different project Government clarification


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->