‘உன் கணவருக்கு ஆபாச காணொலியை அனுப்பிவிடுவேன்’…! - மர்ம நபரின் மிரட்டலால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு...!
I will send pornographic video to your husband young woman bizarre decision after being threatened by mysterious person
சென்னை விருகம்பாக்கம் அருகே ஆபாச காணொலி இருப்பதாக மர்ம நபர் விடுத்த மிரட்டலால் மன உளைச்சலுக்கு ஆளான இளம்பெண் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக விருகம்பாக்கம் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, மிரட்டல் விடுத்த மர்ம நபரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
சாலிகிராமம் மதியழகன் நகரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (30), தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரட்சிதா (27). இந்த நிலையில், சம்பவத்துக்கு முன்தினம் ரட்சிதாவின் செல்போனுக்கு மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அப்போது, தன்னிடம் ரட்சிதாவின் ஆபாச காணொலி இருப்பதாகவும், அதனை அவரது கணவருக்கு அனுப்பிவிடுவதாகவும் கூறி மிரட்டியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்பாராத இந்த மிரட்டலால் அதிர்ச்சியும், பதற்றமும் அடைந்த ரட்சிதா, நடந்ததை தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, ரவிச்சந்திரன் தனது மனைவிக்கு ஆறுதல் கூறி, கவலைப்பட வேண்டாம் என தெரிவித்துள்ளார். பின்னர் அவர் வழக்கம்போல் பணிக்குச் சென்றுள்ளார்.
இதற்கிடையே, அன்றிரவு ரவிச்சந்திரன் தனது மனைவியை செல்போனில் தொடர்பு கொண்டபோது, அவர் அழைப்பை ஏற்கவில்லை. தொடர்ந்து தொடர்பு கொண்டும் பதில் கிடைக்காததால் சந்தேகமடைந்த அவர், வீட்டின் உரிமையாளரைத் தொடர்புகொண்டு வீட்டுக்குச் சென்று ரட்சிதாவைப் பார்த்துவருமாறு கேட்டுக்கொண்டார்.
அதன்பேரில் வீட்டின் உரிமையாளர் அங்கு சென்று பார்த்தபோது, வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் மேலும் அதிகரித்தது. இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்றபோது, ரட்சிதா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக இதுகுறித்து காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த விருகம்பாக்கம் காவலர்கள், ரட்சிதாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
மிரட்டிய மர்ம நபர் யார்?
ரட்சிதாவை செல்போனில் தொடர்புகொண்டு ஆபாச காணொலி இருப்பதாக மிரட்டிய நபர் யார் என்பது குறித்து காவலர்கள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மிரட்டலுக்கு பயன்படுத்தப்பட்ட செல்போன் எண், அழைப்பு விவரங்கள் உள்ளிட்ட தகவல்களைச் சேகரித்து, அந்த நபரை அடையாளம் காணும் பணியில் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், இந்த மிரட்டலுக்குப் பின்னால் வேறு யாரேனும் உள்ளனரா, உண்மையிலேயே காணொலி ஏதேனும் உள்ளதா அல்லது பணம் பறிக்கும் நோக்கில் திட்டமிட்டு மிரட்டல் விடுக்கப்பட்டதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
English Summary
I will send pornographic video to your husband young woman bizarre decision after being threatened by mysterious person