'தலித் சமூகத்தின் நிலை: ஆளுநர் கருத்து அரசியல் உள்நோக்கத்துடன் உள்ளது:' செல்வப்பெருந்தகை கண்டனம்..!
Selva Perundakai condemns Governors comments on the condition of Dalit community
தமிழ்நாட்டில் தலித்துகள் அதிக அடக்குமுறைக்கு உள்ளாக்குவதாக ஆளுநர் ஆர். என். ரவி வெளியிட்டுள்ள கருத்து, பொய்யானதும் அரசியல் உள்நோக்கத்துடன் கூறப்பட்டுள்ளதாகவும்,
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:
'மிழ்நாட்டில் தலித்துகள் அதிக அடக்குமுறைக்கு உள்ளாகிறார்கள் என்ற ஆளுநர் ஆர். என். ரவி இன்று (02.10.2025) வெளியிட்ட கருத்து முற்றிலும் பொய்யானதும் அரசியல் உள்நோக்கத்துடன் கூறப்பட்டதுமான ஒன்று என்பதை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
தமிழ்நாட்டின் பெருமைக்குரிய சமூக வரலாற்றை அவமதிக்கும் வகையில், தலித் சமூகத்தின் நிலையைத் தவறாக சித்தரித்த ஆளுநரின் கருத்துக்கள் பொறுப்பில்லாத கூற்றுகளாகும். சமத்துவமும் சுயமரியாதையும் நெஞ்சில் நிறைந்துள்ள இந்த தமிழ்நாட்டை அவமதிக்கும் எந்தச் சொல்லையும் நாங்கள் கடுமையாக நிராகரிக்கிறோம்.
தேசிய குற்றப்பதிவியல் புள்ளிவிவரங்கள் (NCRB) மற்றும் சமூக நீதித் துறை அமைச்சக அறிக்கைகள் (2022) தெளிவாக குறிப்பிடுகின்றன:
தலித்துகள் மீது அதிக அட்டூழியம் நடைபெறும் மாநிலங்கள்:
உத்தரப்பிரதேசம் – 15,368 (NCRB), 12,287 (PoA Act)
ராஜஸ்தான் – 8,752
மத்திய பிரதேசம் – 7,733
பீகார் – 6,509
தமிழ்நாடு இந்த பட்டியலில் முதல் 10 இடங்களுக்குப் போகவே இல்லை.
மேலும், தலித் ஆயுள் பாதுகாப்பு, சிறப்பு நீதிமன்றங்கள், கல்வி/வேலை வாய்ப்பு, நில உரிமை பாதுகாப்பு, கொடூர சம்பவங்கள் பற்றிய பதிவுகள் என பல குறியீடுகளிலும் தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விடப் பாதுகாப்பான நிலையைப் பெற்றுள்ளது.
சட்ட மாமேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் சிந்தனை தலித் சமூகத்தின் உரிமையின் பாதுகாப்பை உறுதிசெய்தது. பெரியார் அவர்களின் புரட்சி சுயமரியாதையை விதைத்தது. கர்மவீரர் காமராசர் அவர்கள் கல்வியின் ஒளியால் சமத்துவத்தை நிலைநாட்டினார். அண்ணா சமூக ஒற்றுமையின் குரலாக இருந்தார். கலைஞர் சமத்துவ அரசியலின் காவலனாகவும், புறக்கணிக்கப்பட்டோரின் குரலாகவும் வாழ்ந்தார். இவர்களின் வழிகாட்டுதலால் தமிழ்நாடு இன்று இந்தியாவின் எந்த மாநிலத்தையும் விட தலித் சமூகத்திற்குப் பாதுகாப்பான, முன்னேற்றமான நிலையை அடைந்திருக்கிறது.
இப்படிப் பட்ட தமிழ்நாட்டை களங்கப்படுத்தும் வகையில், ஆதாரமற்ற சொற்களை உபயோகிப்பது, அரசியல் வேட்கைக்காகப் பிரிவினை விதைப்பதற்காக மட்டுமே. சமூக ஒற்றுமையையும், நீதி மரபையும் உடைக்கும் நோக்கத்தோடு பேசப்பட்ட இந்த வார்த்தைகள், இந்திய குடியரசின் அடிப்படை நீதிக்கும், தமிழ்நாட்டின் சுயமரியாதை மரபிற்கும் வெளிப்படையான அவமதிப்பு ஆகும்.
ஆளுநர் தனது பொறுப்புக்கு தகுந்த நடத்தையை காட்டவில்லை. அரசியல் மேடைகளில் தோல்வியடைந்தவர்கள், மக்களின் மனதில் புகழைப் பெற முடியாதவர்கள், ஆளுநரின் வாயிலாகப் பிரிவினை விதைக்க முயல்வது தமிழ்நாட்டின் அரசியல் மரபுகளையும் மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையையும் தகர்க்க முடியாது.
தமிழ்நாட்டின் வரலாறு, தலித்துகள் அடக்கப்பட்டதின் வரலாறல்ல. அது, அவர்கள் எழுச்சி பெற்று உரிமைகளை கைப்பற்றிய வெற்றியின் வரலாறு. அந்த வரலாற்றை எவராலும் அழிக்க முடியாது. தமிழ்நாடு காங்கிரஸ் இந்த அவமதிப்பையும், அரசியல் ஆதாயத்திற்காக தமிழகத்தை குறைகூற முயற்சி செய்வதற்கு, தலித் சமூகத்தின் மீது பொய்யான குற்றஞ்சாட்டிய ஆளுநரின் கருத்துகளையும் கடுமையாகக் கண்டிக்கிறது.
ஆளுநர் உடனடியாக தனது வார்த்தைகளை வாபஸ் பெற்றுத், தமிழ்நாட்டு மக்களிடம் மற்றும் தலித் சமூகத்திடம் மன்னிப்பு கோர வேண்டும். இல்லையெனில், அவரின் பொறுப்பின்மை வரலாற்றின் பக்கங்களில் என்றும் குற்றமாகவே பதிவு செய்யப்படும்.' என்று பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Selva Perundakai condemns Governors comments on the condition of Dalit community