தீபிகா படுகோன் – தென்னிந்திய படங்களில் இருந்து விலகிய சர்ச்சைக்கும், IMDb சாதனைக்கும் காரணம் என்ன?
Deepika Padukone What is the reason behind the controversy and IMDb record for quitting South Indian films
பாலிவுட் முன்னணி நடிகை தீபிகா படுகோன், கடந்த சில வாரங்களாகவே திரையுலகச் செய்திகள் மற்றும் சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறார். குறிப்பாக, நாக் அஷ்வின் இயக்கிய பிரபாஸ் நடித்த ‘கல்கி 2898 AD’ படத்தின் இரண்டாம் பாகத்திலிருந்தும், சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகும் ‘ஸ்பிரிட்’ படத்திலிருந்தும் அவர் விலகியிருப்பது பெரும் விவாதத்திற்குரியதாக மாறியுள்ளது.
சில விமர்சகர்கள், தீபிகா தென்னிந்திய சினிமாவில் நடிப்பதை விரும்பவில்லை என்றும், பாலிவுட் இயக்குநர்களுடனும், பாலிவுட் நடிகர்களுடனும் மட்டுமே வேலை செய்ய விரும்புகிறார் என்றும் குற்றம்சாட்டினர். இதனால், சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
ஆனால், இதற்கு மத்தியில் IMDb நிறுவனம் வெளியிட்ட “25 ஆண்டுகள் இந்திய சினிமா (2000–2025)” என்ற சிறப்பு அறிக்கை தீபிகாவின் சாதனையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.
இந்த அறிக்கையில், கடந்த 25 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் அதிகம் பிரபலமான 5 திரைப்படங்களின் பட்டியல் தொகுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 130 படங்களில், தீபிகா படுகோன் நடித்த 10 திரைப்படங்கள் இடம்பிடித்துள்ளன.
இதில், ஷாருக்கான் 20 படங்களுடன் முதலிடத்தில் இருப்பதுடன், அமீர் கான் மற்றும் ஹிருத்திக் ரோஷன் தலா 11 படங்களுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், சல்மான் கான், ஐஸ்வர்யா ராய், ஆலியா பட் போன்ற முன்னணி நட்சத்திரங்களை விட தீபிகா முன்னிலை வகித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய தீபிகா,“எனது தொழில் வாழ்க்கையின் தொடக்கத்தில், ஒரு பெண்ணாக எப்படி நடந்து கொள்ள வேண்டும், எந்தப் பாதையில் செல்ல வேண்டும் என்று பல ஆலோசனைகள் வந்தன. ஆனால் நான் ஒருபோதும் பயப்படவில்லை, கேள்வி கேட்கத் தயங்கவில்லை. அனைவரும் பழகிய வழக்கமான பாதையை விட சற்று கடினமான பாதையைத் தேர்ந்தெடுத்து, புதிய பாதையை உருவாக்கினேன். அதுவே என்னை இன்றைய நிலைக்கு கொண்டு வந்தது.என் குடும்பத்தினரும், ரசிகர்களும், சக ஊழியர்களும் என்மீது வைத்திருந்த நம்பிக்கையே, தைரியமான முடிவுகளை எடுக்க உதவியது. IMDb அறிக்கை, நேர்மையுடனும் விடாமுயற்சியுடனும் முன்னேறினால் மாற்றம் சாத்தியம் என்பதில் எனக்கு நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளிக்கிறது,” என்று தெரிவித்தார்.
தற்போது, தீபிகா ‘கல்கி 2898 AD’-இன் இரண்டாம் பாகத்திலிருந்தும், ‘ஸ்பிரிட்’ படத்திலிருந்தும் விலகியிருப்பதற்கான காரணமாக, ‘கல்கி’ படத்திற்கு அதிகமான அர்ப்பணிப்பும், ‘ஸ்பிரிட்’ படத்திற்கு எட்டு மணி நேர கால்ஷீட் தேவைப்பட்டதும் குறிப்பிடப்படுகிறது.
இந்த சர்ச்சைகளுக்கு மத்தியிலும், தீபிகா தனது அடுத்த பெரிய திட்டங்களில் கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக, ஷாருக்கான் நடிக்கும் ‘கிங்’ திரைப்படத்தில் நடிப்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும், கடந்த பத்து ஆண்டுகளில் IMDb-யில் அதிகம் தேடப்பட்ட இந்திய நடிகர் பட்டியலில் முதலிடத்தை பிடித்திருப்பதும், அவரது ரசிகர்களுக்கு பெருமிதம் அளிக்கிறது.
English Summary
Deepika Padukone What is the reason behind the controversy and IMDb record for quitting South Indian films